×

டாக்டர்கள், சுகாதார பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை

* ரூ.5 லட்சம் வரை அபராதம்
* மத்திய அரசு அவசர சட்டம்

புதுடெல்லி: கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிப்பதற்கான அவசர சட்டத்தை கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்ட டாக்டர் சைமன், வைரஸ் பாதிப்பால் பலியானார். அவருடைய உடலை புதைக்க விடாமல் மக்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் நடத்திய தாக்குதலில் ஆம்புலன்ஸ் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டு, சுகாதார பணியாளர்களும் காயமடைந்தனர். இதுபோல் நாடு முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார, தூய்மை பணியாளர்கள் மீது எச்சில் துப்புவது போன்ற அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், மக்களுக்காக போராடி வரும் டாக்டர்களை மத்திய அரசும், மாநில அரசும் பாதுகாக்க வலியுறுத்தி, நாடு தழுவிய வெள்ளைப் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருந்தனர். இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய மருத்துவக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், சுகாதார பணியாளர்களை பாதுகாக்க அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டுமென மருத்துவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் நேற்று சிறப்பு சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பேட்டியில் கூறியதாவது:கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள் மீது நடத்தப்படும் வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவங்களை  இந்த அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. மருத்துவர்கள் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் தங்கள் சுகாதாரப் பணியை செய்வதை இந்த அரசு உறுதி செய்யும்.

இதற்காக, கொள்ளை நோய் சட்டம் -1897ல் திருத்தம் செய்யும் விதமாக அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படும்.
* தாக்குதல் நடத்துபவர்களுக்கு 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
* படுகாயத்தை ஏற்படுத்தினால் 6 மாதம் முதல் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.
* சுகாதார பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதால் அவர்கள் வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர்கள் நெருக்கடி தரும் சம்பவங்களும் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அப்படிப்பட்டவர்கள் மீதும் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படும்.
* மேலும், வன்முறையில் ஏற்படும் சேதங்களுக்கு வன்முறையாளர்களிடம் இருந்தே இழப்பீடு தொகை வசூலிக்கப்படும். இது, சந்தை விலையைக் காட்டிலும் 2 மடங்கு அதிக தொகையாக வசூலிக்கப்படும் என்றார்.

இந்த அவசர சட்டத் திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு ஒப்புதல் தந்ததை அடுத்து உடனடியாக இது அமலுக்கு வந்துள்ளது. இதே போல், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், ‘டாக்டர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக உயர் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். அவர்கள் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வன்முறை சம்பவங்கள் நடந்தால் மாநில அரசுகள் உடனுக்குடன் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்,’ என கூறப்பட்டுள்ளது.

மாநில முதல்வர்களுடன் 27ல் பிரதமர் ஆலோசனை
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் 3ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி வரும் 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடைசியாக ஏப்ரல் 14ம் தேதியோடு முதற்கட்ட ஊரடங்கு முடிய இருந்த நிலையில், கடந்த 11ம் தேதி முதல்வர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, 13 மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது 40 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டும் கூட வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், 27ம் தேதி நடக்கும் முதல்வர்களுடனான ஆலோசனையில் பிரதமர் இது குறித்து விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தின் மூலம் ஊரடங்கின் அடுத்த கட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

ரூ. 15 ஆயிரம் கோடி அவசர நிதிக்கு ஒப்புதல்
கொரோனா அவசரகால நிதியாக மருத்துவ கட்டமைப்புகளுக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த நிதிக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதில், ரூ.7,774 கோடி அவசரகால நிதியாகவும், மீதமுள்ள தொகை அடுத்த ஓராண்டு முதல் 4 ஆண்டுகளுக்கான இடைக்கால பணிகளுக்கான நிதியாகவும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த நிதியில் இருந்து, மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Tags : Doctors ,health workers ,jail , Doctors attack, 7 years ,jail , assaulting health workers
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...