×

ராஜபாளையத்தில் செடியிலேயே பழுக்க வைக்கப்படும் மிளகாய்கள்: குறைவான விலை கிடைப்பதால் வத்தலாக மாற்றும் விவசாயிகள்

ராஜபாளையம்: மிளகாய்களுக்கு குறைவான விலையே கிடைப்பதால், அவற்றை வத்தலாக மாற்ற செடியிலேயே விவசாயிகள் பழுக்க வைத்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையின் காரணமாக, விளைவித்த மிளகாயை விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் நஷ்டத்தில் வற்றலாக மாற்றி விற்பனை செய்து வருவதாக கலங்காபேரி விவசாயி தெரிவித்துள்ளார். மேலும் அடிக்கடி பெய்து வரும் கோடை மழையால் வற்றல் பணிகளும் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். ராஜபாளையம் கலங்காபேரி பகுதியில் கிணற்று பாசனம் மூலம், நன்செய் நிலத்தில் காய்கறி விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் மிளகாய் பிரதான பயிராக உள்ளது. கடந்த ஆண்டு போதுமான மழை பெய்ததன் காரணமாக தற்போது பாசனத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது. எனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக வீரிய ரக மிளகாய் செடிகளை இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை முடிந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் அறுவடை செய்த மிளகாயை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். அறுவடை செய்த பச்சை மிளகாயை கிலோ வெறும் ரூ.6க்கு வியாபாரிகள் வாங்கி உள்ளனர். இதே நிலை நீடித்தால், மருந்து செலவுக்கு கூட வருமானம் கிடைக்காது என்ற நிலையில் மிளகாயை செடியிலேயே பழுக்க வைத்து வற்றலாக மாற்றி நஷ்டத்திற்கு வியாபாரம் செய்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் கூறும் போது, ஊரடங்குக்கு முன் கிலோ ரூ. 30 வரை மிளகாய் விற்பனை ஆனது. ஊரடங்கு உத்தரவுக்கு பின் ரூ.6க்கு மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. இந்த விலை பணியாட்கள் கூலிக்கு கூட கட்டுப்படியாகாது. இதனால் வேறு வழியின்றி மிளகாய் வற்றல் வியாபாரத்திற்கு மாறி உள்ளோம். 5 கிலோ மிளகாயை வெயிலில் காய வைத்தால் 1 கிலோ வற்றல் கிடைக்கும். தற்போது தரமான வற்றல் கிலோ ரூ.100 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் ஒரு கிலோ மிளகாய்க்கு ரூ.10 என, ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் வரை எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களாக மாலை நேரத்தில் கோடை மழை பெய்வதால் காய வைத்துள்ள மிளகாய் நனைந்து விடுகிறது. இதனால் மிளகாய் பழம் அழுகிவிடுவதால், வற்றல் கழிவாக சென்று விடுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

Tags : Rajapalayam , Rajapalayam, Chillies, Farmers
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!