×

ஏர்வாடியில் 144 தடையால் விலை போகாத செவ்வாழை தார்கள்: மரத்திலேயே பழுத்து உதிருகிறது

ஏர்வாடி: ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏர்வாடியில் செவ்வாழை தார்களுக்கு விலை கிடைக்கவில்லை. இதனால் மரத்திலேயே அவை மரத்திலேயே பழுத்து உதிர்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு, வருகிற மே 3ம் தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. ஓட்டல்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்கப்படுகின்றன. வாகன போக்குவரத்து இல்லாததால், பல இடங்களில் வாழைத்தார்கள் விற்பனையாகாமல் வீணாகி வருகின்றன. அதேபோல விவசாய பொருட்களும் தேங்கி கிடக்கின்றன.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே வன்னியன்குடியிருப்பில் சுமார் 8 ஆயிரம் செவ்வாழை கன்றுகள் சாகுபடி செய்யப்பட்டன.  வரப்பு வெட்டுதல், களை எடுத்தல், வாழை மூடு கிழங்கு நடுதல், தண்ணீர் பாய்ச்சுதல் என ஓராண்டுக்கு வாழைக்கு ரூ.250 வரை விவசாயிகள் செலவு செய்கின்றனர். தற்போது வாழை நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் காணப்படுகிறது. நல்ல விளைந்த காய்களை கேரள வியாபாரிகள் நேரடியாக வந்து பார்த்து தாருக்கு ரூ.1,000 வரை விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்வது வழக்கம். ஆனால் 144 தடை உத்தரவால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதால் வியாபாரிகள் வரவில்லை. ஏர்வாடி அருகே சிறுமளஞ்சி, காவல்கிணறு, நாகர்கோவில் ஆகிய பகுதியில் வாழைக்காய் சந்தைகள் உள்ளன. ஊரடங்கால் இங்கு சந்தைகளும் நடைபெறுவதில்லை. வியாபாரிகள் வரத்து இல்லாததால் செவ்வாழை தார்களை விவசாயிகள் வெட்டாமல் விட்டுள்ளனர். அவை மரத்திலே பழுத்து உதிர்ந்து விடுகின்றன.

இதுகுறித்து வன்னியன் குடியிருப்பை சேர்ந்த மோகன் குமாரராஜா கூறியதாவது: தற்போது 8 ஆயிரம் செந்தொழுவம் வாழைகள் பயிரிட்டு சொட்டு நீர் பாசனம் மூலம் பயிர் செய்து வருகிறேன். வியாபாரிகள் வரத்து இல்லாததால் ரூ,1,000த்தில் இருந்து 1,300வரை விலை போகும் செவ்வாழை தார்கள் வெறும் ரூ.350க்கு நெல்லை மற்றும் திசையன்விளை, நாகர்கோவில் கடைகளுக்கு கொண்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

Tags : Airwadi ,Mars ,Barrier , Airwadi, 144 ban, Tuesdays
× RELATED குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி...