×

அடுத்தடுத்து இறப்பதால் பக்தர்கள், மக்கள் அதிர்ச்சி: குன்றத்தில் செத்து விழும் குரங்குகள்

நோய்த்தோற்றா.. பட்டினிச்சாவா?
காரணத்தை விளக்க வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் மர்மமான முறையில் குரங்குகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றன. கொரோனா பரவிவரும் நிலையில், நோய் தொற்று காரணமாக குரங்குகள் பலியாகின்றனவா என்ற அச்சம் பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள தென்பரங்குன்றம் ஆகிய இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இவை சுப்பிரமணியசுவாமி கோயில், மலைக்கு போகும் பாதையில் உள்ள பழநியாண்டவர் கோயில், மலை மீது உள்ள காசி விசுவநாதர் கோயில், மலைக்கு பின்புறம் உள்ள கல்வெட்டு குடவரை கோயில் ஆகிய இடங்களில் அதிகம் காணப்படுகிறது. பொதுவாக இங்கு வசிக்கும் குரங்குகள், பக்தர்கள் வழங்கும் வாழைப்பழம், தேங்காய், புளியோதரை, பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்களை உணவாக உட்கொள்ளும். தற்போது கொரானா தொற்றால் பக்தர்கள் வருகை இல்லாததால் குரங்குகளுக்கு கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனை சரிசெய்ய திருப்பரங்குன்றம் போலீசார், பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் மூலம் பெறப்படும் வாழை, ஆரஞ்சு, ஆப்பிள், சப்போட்டா, பேரிட்சை போன்ற பழங்களையும், டிரம்களில் தண்ணீரையும் வைத்து இப்பகுதியில் உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இங்குள்ள குரங்குகளில், குறிப்பிட்ட வயதுடைய குரங்குகள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கின்றன. இதுகுறித்து இப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் மதனகலா வனத்துறைக்கு தகவல் கொடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த குரங்குகளை பிரேத பரிசோதனை செய்து பின்னர் அடக்கம் செய்து சென்றுள்ளனர். இதுவரை இப்பகுதியில் இப்படி 14 குரங்குகள் அடுத்தடுத்து இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கொரோனா அச்சம் அதிகரித்துள்ள நிலையில், திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர்ச்சியாக குரங்குகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து இறப்பது இப்பகுதி மக்கள், பக்தர்களை பெரும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது. திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் கூறும்போது, ‘‘வனத்துறை தக்க நடவடிக்கை எடுத்து குரங்குகளை காப்பாற்ற வேண்டும். குரங்குகள் இறப்பிற்கான சரியான காரணத்தை மக்களுக்கு விளக்க வேண்டும். நோய் தொற்று காரணமாக குரங்குகள் இறக்கிறதா அல்லது உணவின்றி பட்டினியால் இறக்கின்றனவா என்ற மக்கள் சந்தேகத்தைப் போக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Devotees ,deaths ,cliff , Cliff, monkeys
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது