×

ஊட்டி அருகே அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் சிக்கியது

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வன  விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. யானை, புலி, சிறுத்தை,  கரடி, காட்டு மாடு போன்றவைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், இவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் வாழும் பகுதிக்கு வரத்து  துவங்கிவிட்டன. குறிப்பாக, கரடி போன்ற விலங்குகள் தேயிலை தோட்டங்களை வாழ்விடமாகவே கொண்டுள்ளன. இவைகள், பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களில்  மறைந்துக் கொண்டாலும், இரவில் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வந்து வீட்டின் கதவுகளை உடைப்பது, கோயில் கதவுகளை உடைத்து எண்ணை மற்றும் பழம் போன்ற  பொருட்களை உட்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. சில சமயம் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளையும்  தாக்குகிறது.

இதனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தற்போது தேயிலை  தோட்டங்களுக்கு செல்வதற்கே மிகவும் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், ஊட்டி  அருகேயுள்ள பிக்கோல், காத்தாடிமட்டம், தேவர்சோலை போன்ற பகுதிகளில் கடந்த  சில நாட்களாக கரடி ஒன்று அட்டகாசம் செய்து வந்தது. அப்பகுதியில் உள்ள  கோயிலுக்குள் சென்று எண்ணையை எடுத்து குடிப்பது, வீட்டின் கதவுகள், தேயிலை  செட்டுகளின் கதவுகளை உடைப்பது என அட்டகாசம் செய்து வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். நேற்று அதிகாலை 5 மணியளவில், அப்பகுதிக்கு வந்த கரடி கூண்டிற்குள் சிக்கியது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் கரடியை அப்பர்பவானி வனத்திற்குள் கொண்டுச் சென்று விட்டனர்.

Tags : Ooty ,The Bear Cage , Feed, bear, trapped
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்