×

கொரோனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 30 ஆண்டுக்கு பிறகு காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் 'பளீச்’ விவசாயிகள் நிம்மதி

ஈரோடு: கொரோனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் எதுவும் கலக்காமல் சுத்தமாக தண்ணீர் செல்வதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். ஈரோடு, பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீரானது காவிரி, பவானி, காலிங்கராயன் உள்ளிட்ட நீர்நிலைகளில் கலந்து வருகிறது. இதை தடுக்க முடியாமல் மாசுக்கட்டுப்பாடு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். குறிப்பாக, காலிங்கராயன் வாய்க்காலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலைகளின் கழிவுநீர் நேரடியாக கலந்து வந்ததால் விவசாய நிலங்கள் மலட்டு தன்மையாக மாறியதோடு பயிர்களும் கருகி வந்தது. இதையடுத்து, விவசாயிகளின் தொடர் போராட்டத்தையடுத்து மெயின் வாய்க்காலில் கழிவுநீர் கலக்காத வகையில் பவானியில் இருந்து ஈரோடு வரை பேபி வாய்க்கால் கட்டப்பட்டதோடு மெயின் வாய்க்காலில் கான்கிரீட் தளமும் அமைக்கப்பட்டு தடுக்கப்பட்டது.

இருப்பினும், அவ்வப்போது இரவு நேரங்களில் குழாய்கள் அமைத்து வாய்க்காலில் கழிவுநீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஈரோடு, பவானி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் மாசு எதுவும் இல்லாமல் சுத்தமாக செல்கிறது. இதை உறுதிபடுத்தும் வகையில் பொதுப்பணித்துறையினர் எடுத்துள்ள தண்ணீர் மாதிரியில் மொத்த உப்பு தன்மையானது (டிடீஎஸ்) அதிகபட்சமாக 190 வரை மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. வழக்கமாக, டிடீஎஸ் 1500க்கு மேல் இருக்கும் நிலையில், தற்போது மிகவும் குறைந்து குடிநீராக பயன்படுத்தும் அளவுக்கு தண்ணீர் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், `30 ஆண்டுகளுக்கு முன்பு வாய்க்காலில் தண்ணீர் எப்படி சுத்தமாக சென்றதோ அதே நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 2ம் தேதி முதல் 19ம் தேதி வரை வாய்க்காலில் செல்லும் தண்ணீர் எடுத்து மாதிரிகளை பரிசோதித்து பார்த்ததில் டிடீஎஸ் அளவானது 190 முதல் 196 வரை மட்டுமே இருந்துள்ளது. தொழிற்சாலைகள் முழுமையாக மூடப்பட்டதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இதே நிலை நீடிக்க வேண்டும். தொழிற்சாலைகளின் கழிவுகள் வாய்க்காலில் கலப்பதில்லை என மாசுகட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து தவறான தகவல்களை விவசாயிகளிடம் கூறி வந்திருப்பது இந்த ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, இனியாவது மாசுகட்டுப்பாடு வாரியம் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்’ என்றனர்.

Tags : Kalingarayan ,closure ,factories ,Corona , Corona, factories, Kalingarayan drain
× RELATED 24,000 வேட்டி சேலைகள் பதுக்கல் அதிமுக...