×

சமூக இடைவெளியை கடைபிடிக்காத பிரபல மருந்தகத்திற்கு சீல்: ரூ.25 ஆயிரம் அபராதம்

பெரம்பூர்: பெரம்பூர் பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பிரபல மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்து, ₹25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் செயல்பட அரசு அனுதி அளித்துள்ளது. இவ்வாறு செயல்படும் கடைகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அனுமதித்த நேரத்தில் மட்டும் செயல்பட வேண்டும், முகக்கவசம், கையுறை கட்டாயம் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பல கடைகளில் இந்த நிபந்தனைகள் கடைபிடிக்கப்படுவது இல்லை. இதுகுறித்து அவ்வப்போது அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விதிகளை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் செயல்படும் பிரபல மருந்தகத்தில் சமூக இடைவெளி இல்லாமல் விற்பனை நடைபெறுவதாகவும், வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருப்பதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், கடையில் பணிபுரியும் ஆட்கள் முகக்கவசம் இல்லாமல்  பணிபுரிவதாகவும் மாநகராட்சி பறக்கும் படைக்கு புகார் வந்தது. அதன்பேரில் திரு.வி.க.நகர் மண்டல அதிகாரி நாராயணன் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரி லட்சுமண குமார் மற்றும் உரிமம் ஆய்வாளர் யுவராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு அந்த கடையில் சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த கடையில் 15க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக நின்று மருந்து வாங்கியதும், அந்த கடையில் பணிபுரியும் ஆட்கள் முகக்கவசம் மற்றும் கையுறை இல்லாமல் மருந்துகளை கையாண்டதும் தெரியவந்தது. இதனால், மாநகராட்சி அதிகாரிகள் அந்த மருந்தகத்தை பூட்டி சீல் வைத்தனர். மேலும், அதன் உரிமையாளருக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Seal ,celebrity dispensary, adhere ,social gap, Fines of Rs
× RELATED மேட்டுப்பாளையத்தில் இன்று காலை...