கால்பந்து இரண்டாம்பட்சம் தான்…

ஸ்பெயினின் பிரபல கால்பந்து கிளப் பார்சிலோனா அணியின் முன்னாள் நட்சத்திரம் ஆந்த்ரெஸ் இனியஸ்டா (35 வயது), அந்த அணிக்காக 16 ஆண்டுகள் விளையாடிய பிறகு 2018ல் அதில் இருந்து விலகி ஜப்பான் கிளப் விஸல் கோபேவுடன் இணைந்துள்ளார். அங்கு உள்ளூர் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஊரடங்கு காரணமாக மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் ஜப்பானிலேயே தங்கியுள்ள அவர், ஸ்பெயினில் உள்ள தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை மிகவும் மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார். இக்கட்டான இந்த சமயத்தில் கால்பந்து விளையாட்டு எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து இனியஸ்டா கூறியதாவது: இது மிகவும் நெருக்கடியான காலகட்டம். குடும்பத்தினருடன் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், ஸ்பெயினில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களை நிறைய மிஸ் செய்கிறேன்.

உலகமே கொரோனா வைரஸ் தொற்றால் முடங்கிப்போயுள்ள இந்த சமயத்தில் கால்பந்து விளையாட்டு இரண்டாம்பட்சம் தான். மக்களின் உயிர், வேலை வாய்ப்பு, சமூக முன்னேற்றம்… போன்றவற்றுக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஸ்பெயினில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது. விரைவில் நிலைமை சீராகி இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகவும் பிரார்த்தனையாகவும் உள்ளது.தொழில்முறை கால்பந்து வீரராக களத்தில் இறங்கி கலக்க முடியாதது மிகவும் விரக்தி அளிக்கிறது. சக வீரர்களை பார்க்க முடியவில்லை. ரசிகர்களின் ஆரவாரத்தை மீண்டும் கேட்க முடியாதா என மனம் ஏங்குகிறது. ஆனாலும், வீட்டில் பாதுகாப்பாக இருந்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம். மிகுந்த கட்டுப்பாட்டுடன் அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே கொரொனாவுக்கு எதிரான போரில் நம்மால் வெற்றி பெற முடியும்.

பயிற்சியாளராவது பற்றி யோசித்து வருகிறேன். இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகே ஒரு உறுதியான முடிவு எடுக்க முடியும்,  இவ்வாறு இனியஸ்டா கூறியுள்ளார்.பார்சிலோமா அணிக்காக 9 லா லிகா சாம்பியன் பட்டம், சாம்பியன்ஸ் லீக் தொடரில் 4 முறை கோப்பை வென்றுள்ள இவர், விஸல் கோபே அணிக்காக கடந்த ஜனவரியில் முதல் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இனியஸ்டாவின் வாழ்க்கை வரலாற்று ஆவணப் படம் ’தி அன்எக்ஸ்பெக்டட் ஹீரோ’ நாளை ஆன்லைனில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: