×

ரம்ஜான் மாதத்தில் ஊரடங்கு சமூக விலகலை கடைபிடிப்போம் ஏழைகளுக்கு உதவுவோம்: முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வேண்டுகோள்

சென்னை: ரம்ஜான் மாதத்திலும் ஊரடங்கு மற்றும் சமூகவிலகலை நாம் கடைபிடிப்பதுடன் பசியோடும், தேவையோடும் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தற்போதைய மற்றும் முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, முன்னாள் ஐஏஎஸ் சையது முனீர் ஹோடா, குத்சியா காந்தி, எம்எப் பரூக்கி, கே.அலாவுதீன், டிஜிபி எம்.எஸ்.ஜாபர் சேட், தற்போதைய அதிகாரிகள் எம்.டி.நிஜாமுதீன், சையது முசாமில் அப்பாஸ், ஏடிஜிபி ஷகில் அக்தர், எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ், ஐஜி நஜ்மல் ஹோடா, டிஐஜி அனிசா ஹுசைன், கலிமுல்லா கான் ஐபிஎஸ் (ஓய்வு),வி.எச்.முகமது ஹனீபா ஐபிஎஸ் (ஓய்வு), ஆசியம்மாள் டிஐஜி, திருச்சி எஸ்பி ஜியாவுல் ஹக், இக்ராம் முகமது ஷா ஐஎப்எஸ் (ஓய்வு) ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:

பெருந்தொற்று ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் ரம்ஜான் நம்மை நோக்கி வந்துள்ளது. பெரும் நெருக்கடியில் இருந்து மனித குலத்தை விடுவிக்க இந்த புனித மாதத்தில் அல்லாஹ் அருள் புரியட்டும். கொரோனா வைரஸ் நேரடி தொடர்பால் பரவி வரும் சூழலில் சமூக விலகல் என்பது மிக முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். கடந்த 2 மாதங்களாக எந்த ஒரு மசூதிகளிலும் கூட்டுத்தொழுகை நடைபெறவில்லை. கடுமையான மழை, குளிர் போன்ற மோசமான வானிலை காலங்களில் ஜமாத் தொழுகைக்காக மசூதிக்கு வரத் தேவையில்லை, வீடுகளில் இருந்து தொழுகை நடத்துங்கள் என நபிகள்  நாயகம் அறிவிக்க சொன்னார்.

வானிலை என்பதை  பெருந்தொற்று காலத்துடன் ஒப்பிட முடியாது.  அலட்சியமாக செயல்படுவதன் மூலம் மரணம் அல்லது துன்பம் நேரும்படி செய்தால்  சட்டத்தின்படி கடுமையான குற்றமாகவும், மார்க்கத்தின்படி பாவமாகவும் ஆகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த காலத்தில் கவனக்குறைவுடன் செயல்படுவது பெரும் சமூக மற்றும் அரசியல் விளைவுகளை கொண்டு வந்து விடும். மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு மற்றும் சமூகவிலகலை நாம் கடைபிடிப்போம். ரம்ஜான் மாதத்தில் நம்மில் பலர் தராவீஹ் தொழுகைக்கு ஆவலுடன் இருப்போம்.

ஆனால் அது ஃபர்ளு அல்ல என்பது நமக்கு தெரியும். தற்போதைய சூழ்நிலையில்  ஃபர்ளா  தொழுகைகள்  ஜமாத்தாக நடைபெறாத நிலையில் தராவீஹ் தொழுகையை கூட்டாக நடத்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. சகோதர, சகோதரிகளே, மனிதகுலமே பெரும் வேதனைக்கு ஆளாகியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பசி போன்றவை பெரும் மக்களை வாட்டுகிறது. மனித குலத்துக்கு தொண்டாற்றுவதே இறைவனுக்கு  தொண்டாற்ற சிறந்த வழி. தொண்டை விட சிறந்த வழிபாடு இல்லை. பசியோடும், தேவையோடும் இருப்பவர்களுக்கு உதவுவதன் மூலம் இந்த ரம்ஜானில் இறையருளை பெறுவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : poor ,Ramzan ,IAS ,IPS , Ramadan month, curfew, social alienation, former IAS, IPS officers, Corona
× RELATED ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்