×

மருத்துவ பணியில் ஈடுபட்டு கொரோனா பாதிப்பால் இறந்த டாக்டர்கள் உடலை அடக்கம் செய்வதில் நடந்த சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது

சென்னை: மருத்துவ பணியில் ஈடுபட்டு, கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி, இறந்த மருத்துவர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பாக நடந்த சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிப்பதாக முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:மனித குலத்திற்கே சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல் மற்றும் வருவாய் துறையினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினை சார்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தையே மறந்து, தன்னலம் கருதாமல் பணியாற்றி வருகின்றனர்.  

ஒவ்வொரு உயிரும் இந்த அரசுக்கு முக்கியம் என்று கருதி, தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. களப் பணியாளர்களின் பணியினை நாடே போற்றி, நன்றி பாராட்டி கொண்டிருக்கிறது. உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இவர்களை, இறைவனுக்கு நிகராக கருதுகின்றேன். கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரிட்டவர்களின் உடல்களை, உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்துதான் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், மருத்துவ பணியில் ஈடுபட்டு, நோய் தொற்றுக்கு ஆளாகி, தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பாக நடந்த ஓரிரு சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.  

மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு, தங்கள் இன்னுயிரை துறப்பவர்களுக்கு, தகுந்த மரியாதை அளிக்கும் விதத்தில், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் எனவும், மருத்துவர்கள் மற்றும் பிற களப் பணியாளர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும், தமிழக அரசு உங்கள் பக்கம் முழுமையாக நிற்கும் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : coroner ,death ,doctors ,Corona ,events , Medical work, Corona, Doctors body, CM Edapadi
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...