×

டிரம்ப் திடீர் அதிரடி: இந்தியர் உட்பட வெளிநாட்டவர் யாரும் அமெரிக்காவில் குடியேற தற்காலிக தடை

 * உள்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்ததன் எதிரொலி


வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர் யாரும் குடியேற தற்காலிகமாக தடை விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் இந்தியர்கள் உட்பட பல நாட்டவர்கள் தான் கணிசமாக உள்ளனர். சாப்ட்வேர் நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் இந்தியர்கள் தான் உள்ளனர். ஆயிரக்கணக்கான சாப்ட்வேர் நிறுவனங்களில் லட்சக்கணக்கில் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் எச்1 பி விசா மற்றும் எல்1 விசா மூலம் அங்கு அனுமதி பெற்று வேலை செய்து வருகின்றனர். மேலும், லட்சகணக்கில் அமெரிக்காவில் குடியேறிய வௌிநாட்டவரில் இந்தியர்களும் அடங்குவர். கொரோனா தாக்குதல் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்கர்களுக்கு அதிபர் டிரம்ப் மீது அதிருப்தி அதிகரிக்க ஆரம்பித்தது. முன்னதாகவே நடவடிக்கை எடுக்காதது தான் காரணம் என்று பலரிடம் கருத்து பரவ ஆரம்பித்து விட்டது. பல நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், மொத்தம் இதுவரை இரண்டரை கோடி அமெரிக்க இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.


வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார் டிரம்ப். இந்த நிலையில், கடும் அதிருப்தி பரவி வருவதை கட்டுப்படுத்தி அமெரிக்கர்களின் ஆதரவை மீண்டும் பெற டிரம்ப் இப்போது அதிரடியாக முடிவுகளை எடுக்க உள்ளார். முதல் கட்டமாக அமெரிக்காவில் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் குடியேற தற்காலிகமாக தடை விதிப்பது என்று முடிவு செய்துள்ளார். இதை அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதிகாரப்பூர்வமாக ஓரிரு நாளில் அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘நாம் கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் (கொரோனா) போராடி வருகிறோம். அத்துடன், நம் மண்ணில் பல லட்சம் இளைஞர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். இந்த நிலையை தொடர விட மாட்டேன். என் மிகச்சிறந்த அமெரிக்க குடிமக்களின் நலன் கருதி, குடியேற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்போகிறேன். வெளிநாட்டவர் யாரும் அமெரிக்க மண்ணில் குடியேற தற்காலிகமாக தடை விதிக்கப்போகிறேன்’ என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியர்களுக்கு பாதிப்பா?
ஒவ்வொரு தேர்தல் வரும் போதும், அமெரிக்க அதிபர்கள் இப்படி தடாலடி அறிவிப்பை வெளியிடுவது வழக்கம் தான்.அந்த வகையில், நவம்பரில் தேர்தல் வருவதால் டிரம்பும் இப்படி தடாலடி் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியர்கள் பெரும்பாலும் ஏற்கனவே நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர், பலரும் கிரீன் கார்டு பெற விண்ணப்பித்தும் உள்ளனர். மற்ற சில லட்சம் பேர், எச்1பி விசா மூலம், ‘நான் இமிகிரன்ட்’ விசாவில் குடியேறி பணியாற்றி வருகின்றனர்.   இவர்கள்  வேலைக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை. ஆனால், எச்1பி விசா புதுப்பிப்பதை கொரோனா பாதிப்பால் நிறுத்தி வைத்துள்ளார் டிரம்ப். இதை நீட்டித்தால் தான் பலருக்கு ஆபத்து காத்திருக்கிறது.

Tags : foreigners ,Indians Trump ,US ,Indians , Trump's sudden action,temporarily ,foreigners, including Indians, from settling,US
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!