×

சீனாவில் இருந்து வாங்கப்பட்ட ரேபிட் கிட் சோதனைக்கு திடீர் தடை:95% தவறான முடிவுகளையே காட்டுகிறது: மாநிலங்கள் புகாரால் மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: கொரோனா தொற்று இருப்பதை விரைவாக கண்டறிவதற்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விரைவு பரிசோதனை கருவிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்) தரமற்றவை என்றும், அதில் நடத்தப்படும் சோதனைகளின் முடிவு 95 சதவீதம் தவறாக இருப்பதாகவும் பல்வேறு மாநிலங்கள் குற்றம்சாட்டி உள்ளன. இதையடுத்து, இந்த கருவிகளை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என தடை விதித்து அனைத்து நிலங்களுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக முதலில் கடந்த மாதம் 24ம் தேதி அறிவிக்கப்பட்ட 21 நாள் தேசிய ஊரடங்கு உத்தரவு கடந்த 14ம் தேதி முடிவுக்கு வந்தது. இருப்பினும், கொரோனா பரவல் அதிகரித்ததால், அடுத்த மாதம் 3ம் தேதி வரையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா பரவல் சமூக தொற்றாக மாறுவதை தடுப்பதற்காக, மக்களிடம் அதிகளவில் பரிசோதனை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கை மதிக்காமல் மக்கள் வெளியே சுற்றுவதால், இந்த வைரசின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதே இதற்கு காரணம். தற்போதுள்ள நடைமுறைகளில் நடத்தப்படும் பரிசோதனைகளின் முடிவுகள் கிடைப்பதற்கு 3 நாட்கள் வரை ஆகின்றன. எனவே, பரிசோதனையை விரைவாக நடத்துவதற்காக சீனாவிடம் இருந்து ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ எனப்படும் விரைவு பரிசோதனை கருவிகளை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த வாரம் முதலில் 6,5 லட்சம் கருவிகளும், அதைத் தொடர்ந்து 3 லட்சம் கருவிகளும் 2 கட்டங்களாக வாங்கப்பட்டன. இவற்றை மாநிலங்களுக்கு பிரித்து கொடுத்ததில் மத்திய அரசு பாரபட்சம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, கொரோனா பரவல் அதிகமாக உள்ள தமிழகத்துக்கு வெறும் 24 ஆயிரம் கருவிகள் மட்டுமே வழங்கப்பட்டன. இது, பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில், இந்த கருவிகளை பயன்படுத்தி பல்வேறு மாநிலங்கள் சோதனை நடத்தி வருகின்றன. ஆனால், இந்த கருவியால் நடத்தப்படும் பரிசோதனைகளில் 95 சதவீதம் தவறான முடிவுகளை காட்டுவதாக மாநில அரசுகள் குற்றம்சாட்டி உள்ளன. இது, பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் (ஐசிஎம்ஆர்) புகார்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து, அடுத்த 2 நாட்களுக்கு இந்த பரிசோதனை கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நேற்று தடைவிதித்தது. இது குறித்து இந்த கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், `விரைவு பரிசோதனை கருவிகளின் தரத்தை பரிசோதித்து வருகிறோம். அதனால், அடுத்த 2 நாட்களுக்கு இவற்றை பயன்படுத்தி சோதனை நடத்த வேண்டாம். மீண்டும் எப்போது சோதனை நடத்தலாம் என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விரைவு பரிசோதனை கருவி தரமற்றவை, முடிவுகளை தவறாக காட்டுகிறது என்ற குற்றச்சாட்டை முதலில் தெரிவித்த மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. இந்த மாநிலத்தில் இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த கருவிகள் மூலம் 90 சதவீதம் துல்லியமான முடிவுகள் விரைவில் கண்டறியப்படும் என்று கூறி வந்த நிலையில், அது 5.4 சதவீதம் மட்டுமே துல்லியமான முடிவை காட்டுகிறது. இந்த கருவியால் பயன் ஏதுமில்லை. பரிசோதனை கூடங்களில் ‘பாசிடிவ்’ என முடிவு வந்த நோயாளிகளுக்கு, விரைவு பரிசோதனையில் ‘நெகடிவ்’ என வந்துள்ளது. சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையின் மருந்து மற்றும் நுண்ணுயிரி துறை தலைமை மருத்துவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, இக்கருவிகள் 5.4 சதவீதம் மட்டுமே துல்லியமான முடிவை காட்டுவதாக கண்டுபிடித்துள்ளது.

இக்குழுவின் பரிந்துரைப்படி விரைவு பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ‘பிசிஆர்’ பரிசோதனை முறையில் ‘பாசிடிவ்’ என்று முடிவு வந்த 168 வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு, விரைவு பரிசோதனை கருவியைக் கொண்டு சோதனை செய்ததில் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. இதனால், அதன் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. அதன் பின்னர் வந்த ஐசிஎம்ஆர் முடிவுகள் மாநில அரசுக்கு சாதகமாக வந்துள்ளது. இதனால், இந்த விரைவு பரிசோதனை கருவிகள் திருப்பி அனுப்பப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ஊழல் குற்றச்சாட்டு உறுதி?
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விரைவு பரிசோதனை கருவிகள் தரமற்றவை என்றும், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு இருப்பதாகவும், அதில் ஊழல் நடந்து இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், இந்த கருவிகளால் நடத்தப்படும் சோதனை முடிவுகள் 5 சதவீதம் மட்டுமே சரியாக இருப்பதாக தெரிய வந்திருப்பது, தங்களின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

Tags : China ,Fed ,Federal Government , China, Rapid Kid, States, Federal Government
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன