×

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் சாதனம் உயிர் காக்கும் பணியில் துணி மாஸ்க்: வீட்டிலேயே தயாரிக்கும் பெண்கள்

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முக்கிய சாதனமான மெடிக்கல் மாஸ்க்குகள் தட்டுப்பாட்டை போக்க துணியால் தயாரிக்கப்படும் மாஸ்க்குகள் வலம்வரத் தொடங்கியுள்ளன. உலகம் முழுவதையும் லட்சக்கணக்கான மக்களை காவுகொண்டுவரும்  கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்கவும், வைரஸ் பரவாமல் தடுக்கவும் முகக் கவசம் மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஆரம்பித்தவுடன் மக்கள் மாஸ்க்குகளை தேடி அலைய ஆரம்பித்தனர். மருத்துவ சாதனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், மெடிக்கல் ஸ்டோர்களில் மக்கள் மாஸ்க்குகளை வாங்க அலைமோதினர்.

 முழு அடைப்பு காரணமாக பல நிறுவனங்களால் மாஸ்க் தயாரிக்கும் பணிகளும் முடங்கின. இந்நிலையில், மாஸ்க்குக்கு பதிலாக மக்கள் கர்ச்சிப், துணி போன்றவற்றை அணிய ஆரம்பித்தனர்.  இதற்கிடையே தையல் தொழில் தெரிந்தவர்கள் தாங்களாகவே காட்டன் துணிகளில் மாஸ்க்குகளை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். வீடுகளில் தையல் தெரிந்த பெண்கள் தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் துணியால் ஆன மாஸ்க்குகளை தயாரித்து கொடுக்கிறார்கள். இந்த வகையில் சென்னையை சேர்ந்த லைட் அப் ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவரும் லதா சந்திரமௌலி என்பவர் வீட்டில் தையல் மிஷின் வைத்திருக்கும் பெண்களை ஒருங்கிணைத்து காட்டன் துணிகளால் மாஸ்க் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

வேலையில்லாத நேரத்தில் பெண்களுக்கு ஒரு வருமானமாகவும், மக்களுக்கு மாஸ்க் தட்டுப்பாடு இல்லாமல் செய்யவும் இந்த மாஸ்க் தயாரிக்கும் முடிவு எடுத்தேன். நாங்கள் தயாரிக்கும் மாஸ்க்குகளை சுத்தம் செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். இவ்வாறு லதா கூறினார். இவரைப் போன்றே ஊரடங்கு நேரத்தில் வருமானம் இல்லாமல் திணறும் குடும்பங்களுக்கும் நல்ல பலன் ஏற்படுவதாக வீடுகளில் மாஸ்க் தயாரிக்கும் பெண்கள் தெரிவித்தனர். வீட்டில் முடங்கி இருக்கும் நேரத்தில் உயிர் காக்கும் அத்தியாவசிய தேவையான மாஸ்க் தயாரிப்பில் பெண்கள் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : home ,Women , Corona virus, cloth mask, women
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...