×

மத்திய அரசு கண்டனம் எதிரொலி: கேரளாவில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் கடுமையானது

திருவனந்தபுரம்: கேரளாவில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு நிபந்தனைகள்  மத்திய அரசின் கண்டனத்தை தொடர்ந்து இன்று முதல் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 21ம் தேதி முதல் நோய் பாதிப்பு குறைந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தில் நிபந்தனைகளை அந்தந்த மாநிலங்கள் தளர்த்தி கொள்ளலாம் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி கேரளாவில் நேற்று முதல் பச்சை, ஆரஞ்சு பி என அறிவிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் 20ம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று நேற்று முன்தினம் இரவு திடீரென அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நோய் பாதிப்பு உள்ள இடங்களை ‘ஹாட் ஸ்பாட்’டுகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பகுதிகளில் எந்த காரணம் கொண்டும் நிபந்தனைகளை தளர்த்தக்கூடாது எனவும் ெதரிவித்திருந்தது. ஆனால் கேரளாவில் நேற்று நிபந்தனைகளை தளர்த்துவதாக அறிவித்திருந்த 2 மண்டலங்களிலும் ஏராளமான ஹாட் ஸ்பாட் பகுதிகள் உள்ளன.

இந்த நிலையில் 2 மண்டலங்களிலும் நிபந்தனைகள் தளர்த்தப்பட்ட நிலையில், இந்த ஹாட் ஸ்பாட் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் பெருமளவு வெளியேவர தொடங்கினர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஓட்டல்கள் உள்பட பல நிறுவனங்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து மத்திய உள்துறை கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை முதல் மீண்டும் நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டன. கேரள அரசு சிவப்பு மண்டலமாக அறிவித்த 4 மாவட்டங்கள் தவிர மற்ற இடங்களில் சலூண் கடைகள், ஒர்க்-ஷாப்புகள், ஓட்டல்கள் உள்பட கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவை அனைத்தையும் மூட மத்திய அரசு உத்தரவிட்டது. இருச்சக்கர வாகனங்களில் குடும்ப உறுப்பினராக இருந்தால் 2 பேர் பயணிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்கும் மத்திய அரசு தடை விதித்தது.

இதேபோல மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்து கூடாது. கார்களில் பின் இருக்கையில் பயணிகள் ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்கலாம். நகராட்சி பகுதிகளில் சிறு, குறு நிறுவனங்களை திறக்கக்கூடாது எனவும் மத்திய அரசு கூறியது. இதையடுத்து மத்திய அரசின் உத்தரவு இன்று முதல் மீண்டும் அமலுக்கு வரும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அரசு ஊழியர்கள் மட்டும் பணி நிமித்தமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். 5 ேபருக்கு ேமல் கூடக்கூடாது. பொது இடங்களில் துப்பக்கூடாது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் ஒன்று கூடக்கூடாது. ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கக்கூடாது. பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் சலூண் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆனால் வீடுகளுக்கு சென்று முடி திருத்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல பச்சை மண்டலத்துக்கு உட்பட்ட கோட்டயம், இடுக்கி மாவட்டங்களிலும் தற்போதைக்கு நிபந்தனைகளை முழுவதுமாக தளர்த்த வேண்டாம் என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல ஆரஞ்சு ஏ மண்டலத்துக்கு உள்பட்ட கொல்லம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் 24ம் தேதி முதல் நிபந்தனைகள் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முடிவிலும் மாற்றம் வரும் என்று கருதப்படுகிறது. திருவனந்தபுரம், கொச்சி, பாலக்காடு, ஆலப்புழா ஆகிய நகர்ப்பகுதிகளையும் ஹாட் ஸ்பாட்டுகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பகுதிகளிலும் நேற்று மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதையடுத்து இன்று காலை முதல் நகர எல்லைகளில் நுழையும் ஒரு வழி தவிர மற்ற அனைத்து பகுதிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

Tags : government ,Kerala , Central Government, Kerala, Curfew
× RELATED சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு...