×

தேவையான நேரத்தில் உரம் கிடைக்காததால் சாத்தான்குளம் பகுதியில் முருங்கை விவசாயம் அடியோடு பாதிப்பு: விலையும் இல்லாததால் விவசாயிகள் கவலை

சாத்தான்குளம்: ஊரடங்கு உத்தரவால் உரக்கடைகளும் மூடப்பட்டதால் சாத்தான்குளம் பகுதியில் முருங்கை காய்கள் விளைச்சலும் இல்லாமல் போதிய விலையும் இல்லாததால் விவசாயிகள் பரிதவிப்புக்குள்ளாகி உள்ளனர். சாத்தான்குளம், தட்டார்மடம் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் முருங்கை பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். இப்பகுதியில் விளைவிக்கப்படும் முருங்கைகாய்கள் நல்ல தரமுடன் இருப்பதால் வெளிமாவட்டங்களில் அதிக அளவு கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சாத்தான்குளம், தட்டார்மடம், போலையர்புரம், பகுதியில் உள்ள முருங்கை மண்டி மூலம் விவசாயிகளிடம் முருங்கை கொள்முதல் செய்யப்பட்டு நெல்லை, நாகர்கோவில், சென்னை, பெங்களூரு, டெல்லி மற்றும் வெளி நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது கொரோனா தடுப்பு பணிக்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் உரம் கிடைக்காமல் முருங்கைக்கு உரிய முறையில் உரம் இட முடியாமல் சிரமத்தில் உள்ளனர். வசதியான விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் முருங்கையை வளர்ந்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

உரம் வைத்து பராமரிக்காத முருங்கைகள் தற்போது மண்டியில் 1கிலோ ரூ 5முதல் 6வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதேபோல் நன்றாக உரம் வைத்து பராமரிக்கப்பட்ட முருங்கைகள் நன்றாக விளைச்சல் இருப்பதால் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. கொரோனா தடுப்பு பணி பாதிப்பால் ஏழை விவசாயிகள் முருங்கைக்கு உரிய விலை கிடைக்காமல் மிகுந்த கவலை அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது முருங்கை மண்டிகள் மதியம் 1மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு முருங்கை கொள்முதல் செய்ய எடுத்து செல்லப்படாததால் மண்டிக்கு குறைந்த அளவே முருங்கை காய்கள் எடுத்து வரப்பட்டு கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சாத்தான்குளம் பகுதியில் முருங்கைகள் தற்போது நெல்லை, ஆலங்குளம், நாகர்கோவில் பகுதிக்கு மட்டுமே விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
 இதுகுறித்து முருங்கை விவசாயி பாலமுருகன் கூறுகையில், ‘போலையர்புரத்தில் முருங்கை மண்டி அமைத்து நடத்தி வருகிறேன்.

இப்பகுதியில் இருந்து முன்பு முருங்கை காய்கள் 60 டன் வரை எடுத்து கொள்ளப்பட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படும். தற்போது கொரோனா தடுப்பு பணியால் நெல்லை, நாகர்கோவில் பகுதிகளுக்கு மட்டும் முருங்கைகாய்கள் எடுத்து செல்லப்பட்டு விற்பனை ெசய்து வருகிறோம். தற்போது 1மணி வரை மட்டும்  கடை திறந்திருக்கும் என்பதால் 5 டன் முதல் 6 டன் வரையே முருங்கை எடுத்துக்கொள்ளப்படுகிறது’ என்றார்.

Tags : area ,Sathankulam , Fertilizer, sataniculam, drumming, vulnerability
× RELATED வாட்டி வதைக்கும்...