×

சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் கும்பல்; குமரி மலை பகுதிகளில் டிரோன் கேமரா மூலம் போலீஸ் சோதனை: மர்ம நபர்கள் நடமாட்டம் கண்காணிப்பு

நாகர்கோவில்: மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால், மலை பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரின் பேரில் டிரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25ம் தேதியில் இருந்து ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள். வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு நூதன தண்டனைகள் வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் 25 நாட்களில் மொத்தம் 6134 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். 4106 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஊரடங்கையொட்டி தற்போது டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி குமரி மாவட்டத்தில் திருட்டு மது விற்பனை கொடி கட்டி பறக்குகிறது. ஒரு சில இடங்களில் டாஸ்மாக் கடை சூப்பர் வைசர்கள், பணியாளர்கள் உதவியுடன் பார்களில் இருந்து சரக்கு வகைகள் சப்ளை செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்பனையாகின்றன. சரக்குகள் தேவை என்பதால் அதிக விலை பற்றி கவலைப்படாமல் வாங்கி செல்கிறார்கள். இது ஒருபுறமிருக்க மாவட்டம் முழுவதும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குலசேகரம், திருவட்டார், தக்கலை, குளச்சல், இரணியல் உள்பட மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வீடுகளில் வைத்தே சாராயம் காய்ச்சுகிறார்கள். ஒரு சில பகுதிகளில் மலைகளில் சாராயம் காய்ச்ச தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக போலீசாரும் அவ்வப்போது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த 22ம் தேதியில் இருந்து இதுவரை 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 60 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் சாராயம் காய்ச்சுவது தொடர் கதையாகி உள்ளது. இது தொடர்பாக மலை பகுதிகளில் கண்காணிக்க  எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று நாகர்கோவில் ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையில் மலை பகுதிகளில் போலீசார் கண்காணித்தனர். பொய்கை அணையில் இருந்து டிரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். பொய்கை அணையை சுற்றி உள்ள மலையடிவார பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டது. இதில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் திருட்டு மது விற்பனை செய்பவர்களை கண்காணிக்கும் வகையில் அந்தந்த சரக டி.எஸ்.பி.க்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Tags : gang ,persons ,Kumari ,mountain range , Booze, drone camera, police raid
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே காங்....