×

தன் உயிரை பணயம் வைத்து பாம்புடன் போராடி எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய நாய்: மதுரையில் ஒரு ‘பாசப்போராட்டம்’

மதுரை: மதுரை கூடல்நகர் பகுதியில் தன் உயிரை பணயம் வைத்து, பாம்புடன் போராடி எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய நாய் உயிருக்கு போராடி வருகிறது. மதுரை, கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் புல்லிக்குட்டான் இனத்தைச் சேர்ந்த, ஒன்றரை வயதான பெண் நாயை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நாய், வழக்கத்தை மீறி பயங்கர சப்தம் எழுப்பியது. பின் வீட்டு வளாகத்திற்குள் அங்குமிங்கும் ஓடி, கார் செட் பகுதிக்கு சென்றது. இதைக்கண்டு ஓடி வந்த குடும்பத்தினரை, அந்த நாய் கார் செட்டிற்குள் நெருங்க விடவில்லை. அப்போது அங்கிருந்த ஒரு கட்டுவிரியன் பாம்பு, நாயை கடிக்கத் துவங்கியது. குடும்பத்தினர் பாம்பிடம் இருந்து நாயைக் காப்பாற்ற முயன்றும், இறுதி வரை குடும்பத்தினரை நெருங்க விடாமல் நாய் சண்டையை தொடர்ந்தது.

இதில் பாம்பு நாயின் முகத்தில் கொத்தியது. மேலும் நாய் கடித்ததில் பாம்பு சம்பவ இடத்திலேயே இறந்தது. சில நிமிடங்களில் நாய் மயக்கமடைந்தது. இதையடுத்து அவசர சிகிச்சைக்காக கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனர்.கால்நடை மருத்துவர் மெரில்ராஜ் கூறும்போது, ‘‘பாம்பு கடித்ததில் நாய்க்கு விஷம் உடம்பில் அதிகமாக ஏறி விட்டது. தற்போது விஷ முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நாய் உயிருக்கு போராடி வருகிறது. தீவிர காண்காணிப்பில் உள்ளது’’ என்றார்.மதுரையில் தன் உயிரை பணயம் வைத்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய நாய், உயிருக்கு போராடி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : passion fight ,Madurai , Master, dog, madurai
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...