×

சத்தியமங்கலம் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் தாடை சிதைந்தது

சத்தியமங்கலம்:: சத்தியமங்கலம் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் தாடை சிதைந்து உயிருக்கு போராடி வருகிறது. சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பை பகுதியை சேர்ந்தவர் விவசாயி குமாரசாமி (60). இவர், தனது தோட்டத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் தனது பசு மாடுகளை அப்பகுதியில் உள்ள வனத்தை ஒட்டி அமைந்துள்ள நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாடுகள் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்டது. இதைக்கேட்டு அப்பகுதியில் சென்று பார்த்தபோது  ஒரு பசுமாடு முகத்தின் தாடை சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக மேய்ச்சல் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த அவுட்டுக்காய் எனப்படும்  நாட்டு வெடிகுண்டை பசு மாடு கடித்ததால் வெடித்து தாடை  சிதைந்தது தெரியவந்தது. இது குறித்து குமாரசாமி  சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாடை சிதைந்த பசு மாட்டிற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sathyamangalam ,Cow , Satyamangalam, country bomb, cow
× RELATED பெரியகுளம் அருகே...