×

தனிமை வார்டுகளுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு அதிகாரிகள், போலீசார் மீது கொலைவெறி தாக்குதல்: பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூரு பாதராயணபுராவில் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதற்காக சென்ற சுகாதாரத் துறை அதிகாரிகள், போலீசார் மீது தாக்குதல் நடத்திய புகாரில் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. மாநகரில் கொரோனா தொற்று பாதிப்புள்ள பாதராயணபுரா, பாபுஜிநகர் ஆகிய பகுதிகள் கடந்த பத்து நாட்களாக லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இருந்து மக்கள் யாரும் வெளியில் வர முடியாத வகையில் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதராயணபுராவில் 58 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் ஏற்கனவே 20 பேரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்துள்ள நிலையில் மீதியுள்ள 38 பேரையும் தொற்றுநோய் மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்றனர். அப்போது தொற்று அறிகுறி உள்ளவர்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய அனுமதிக்காமல் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தியதுடன் சுகாதார அதிகாரிகள், போலீசார் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். பாதராயணபுராவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக போலீஸ் முகாம்களையும் உடைத்தெறிந்தனர்.

மேலும் அப்பகுதியில் நள்ளிரவில் ஆண், பெண்கள் சர்வ சாதாரணமாக சுற்றி திரிந்ததுடன் பலர் மது குடித்தும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது. நிலைமை மோசமாகியதால், உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனால் பாதராயணபுரா அதிகாலை வரை பதட்டமாகவும் பரபரப்பாகவும் காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பேட்டராயனபுரா போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்கராஜு, சாம்ராஜ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரசாமி ஆகியோர் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டது. அவர்கள் இரவோடு இரவாக கலவரத்தில் ஈடுபட்ட 54 பேரை கைது செய்து ஆடுகோடி போலீஸ் நிலையத்தில் வைத்தனர். மேலும் கலவரத்திற்கு காரணமாக இருந்த பெண் உள்பட 13 பேரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள். மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேடி பிடித்து வரும் போலீசார், தொடர்ந்து கலவரம் ஏற்படாமல் தவிர்க்க 10 பட்டாலியன் கே.எஸ்.ஆர்.பி. போலீசாரை நியமனம் செய்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடந்த பாதராயணபுராவுக்கு நேற்று காலை மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற தவறியதாக அப்பகுதி துணை ேபாலீஸ் கமிஷனர் ரமேஷ்பாவுத் மீது கடும் அதிருப்தி வெளிப்படுத்தினார்.



Tags : Murder attack ,policemen ,Bengaluru ,conversion ,protesters , Murder , protesters, policemen,transfer, isolation wards: Bengaluru
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு