×

ராணிப்பேட்டை அருகே பயங்கரம்: 3 வாலிபர்களை வெட்டிக் கொன்று பொன்னையாற்றில் சடலங்கள் புதைப்பு

* திருட்டு வழக்கில் சிக்கிய 3 பேர் திடுக் தகவல்
* சென்னையை சேர்ந்தவர்கள் உட்பட 8 பேருக்கு வலை

திருவலம்: திருவலம் அருகே 3 வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். பொன்னையாற்றில் அவர்களது சடலங்களை  புதைத்ததாக போலீசாரிடம் சிக்கிய 3 பேர் பரபரப்பு தகவல்களை கூறி உள்ளனர். இது தொடர்பாக தலைமறைவான மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் ஹவுசிங் போர்டு பம்ப் அவுஸ் பகுதியில் கடந்த 16ம் தேதி சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த இளைஞர்களை சிப்காட் போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனையடுத்து அங்கிருந்த 3 பேரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் ராணிப்பேட்டை சீக்கராஜபுரம் மோட்டூர் பஜனைகோயில் தெருவை சேர்ந்த  யுவராஜ் (26), பல்லவநகர் கன்னிகோயில் தெருவை சேர்ந்த வாசு (19), திருவலம் பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்பை சேர்ந்த அரவிந்தன் (19) என்பது தெரியவந்தது.

இவர்கள் கடந்த மார்ச் மாதம் சிப்காட் அக்ராவரம் மலைமேடு பகுதியை சேர்ந்த சரவணன் மனைவி வள்ளி (30) என்பவரிடம் லாலாபேட்டையில் வழிப்பறி செய்து, சுமார் 1 லட்சம் மதிப்புள்ள தங்கச்செயினை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.  இதனையடுத்து போலீ சார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் மேலும், விசாரணை நடத்தியதில், 3 பேரும் மற்றும் தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் மற்றும் சென்னையை சேர்ந்த 4 பேர் ஆகிய 8 பேரும் சேர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருட்டு மற்றும் வழிப்பறி செய்வதில் ஏற்பட்ட போட்டி காரணமாக சென்னையை சேர்ந்த ஆசீப், விழுப்புரம் மாவட்டம், தெளி கிராமத்தை சேர்ந்த நவீன், சூர்யா ஆகிய மூவரையும் சரமாரியாக தாக்கி வெட்டி கொலை செய்து விட்டு திருவலம் கெம்பராஜபுரம் கிராமம் பனந்தோப்பு பகுதி பொன்னையாற்றில் புதைத்ததாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களை அழைத்துக்கொண்டு புதைத்த இடத்தை காண்பிக்கும்படி கூறினர். ஆனால் சடலங்களை புதைத்ததாக அடையாளம் காட்டிய இடம் வேலூர் மாவட்டம், திருவலம் கெம்பராஜபுரம் வருவாய் துறையினருக்கு சொந்தமான இடம் என்பதால் இதுகுறித்து சிப்காட் போலீசார் விஏஓ ஜோதீஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விஏஓ திருவலம் போலீசில் புகார் அளித்தார்.  உடனடியாக காட்பாடி இன்ஸ்பெக்டர் புகழ் திருவலம் காவல்நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். திருட்டு வழக்கில் சிப்காட் போலீசார் 3 பேரையும் சிறையில் அடைத்தனர். திருவலம் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி சிறையில் உள்ள 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளார்.

மேலும் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் 3 நபர்களின் புகைப்படங்களையும் குற்றவாளிகள் போலீசாரிடம் கொடுத்துள்ளனர்.  எனவே அந்த புகைப்படங்களை வைத்து சம்பந்தப்பட்ட இடங்களில் விசாரணையும் நடைபெற்று வருகிறது. அதோடு தப்பி ஓடிய 5 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். பொன்னையாற்றில் 3 பேரை கொலை செய்து சடலங்களை புதைத்துள்ளதாக குற்றவாளிகள் கூறியிருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Ranipet ,Terror , Ranipet, 3 young men, murdered
× RELATED வட மாநில இளைஞர்களுக்கு மட்டும் வேலை...