×

யூடியூப் வீடியோ பார்த்து வீட்டில் மதுபானம் தயாரித்த ஐடி ஊழியர்கள் 2 பேர் கைது

சென்னை: யூடியூப் வீடியோ பார்த்து வீட்டில் மதுபானம் தயாரித்த ஐடி நிறுவன ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், கடந்த மாதம் 25ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், குடிமகன்கள் மதுபானம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதை பயன்படுத்தி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சிலர் கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், திருநீர்மலை போன்ற புறநகர் பகுதிகளில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர்.

நீலாங்கரை பகுதியில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே மதுபானம் தயாரித்த ஐடி நிறுவன ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  
சின்ன நீலாங்கரை, சிங்கார வேலன் தெருவை சேர்ந்த ராகுல் (22), வினோத் ராஜ் (26) ஆகிய இருவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். தற்போது, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், இவர்கள் இருவரும் யூடியூப் வீடியோ பார்த்து வீட்டிலேயே மதுபானம் தயாரிப்பதாக நீலாங்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்ஐ பிரதீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது, இவர்கள் மதுபானம் தயாரித்து வீட்டின் பின்புறம் பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் தயாரித்த மதுபானத்தை பறிமுதல் செய்து, கீழே ஊற்றி அழித்தனர்.

Tags : IT staff ,home , YouTube video, brewery, IT staff, Corona, 2 arrested
× RELATED சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சுவாமி...