×

கொரோனா நெருக்கடியை வெல்ல ஒரே வழி மக்கள் ஒன்றிணைந்து கைகோர்க்க வேண்டும்: காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நெருக்கடியை வென்றெடுக்க ஒரே வழி மக்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் கைகோர்ப்பது தான் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திமுக எம்எல்ஏக்களுடன் பேசினார். தொடர்ந்து அவர் தனது முகநூல் மற்றும் டிவிட்டர் சமூக வலைதளப் பக்கங்களில் காணொலி ஒன்றினைப் வெளியிட்டார். அதில் அவர் பேசியுள்ள விவரம் பின்வருமாறு:   கொரோனா என்பது தொற்று நோயாக இருப்பதாலும், அதற்கு இன்றுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதாலும் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நோய்ப் பரவாமல் தடுக்க ஒவ்வொருவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்கு ஊடரங்கு தான் முழுமுதல் தடுப்புக் காவல். இதை முறையாகக் கடைப்பிடித்தாலே வைரஸ் பரவாமல் தடுத்திடலாம்! இந்த ஊரடங்கின் இன்னொரு பக்கம் என்னவென்றால்; இதனால் இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறார்கள். பசி, பட்டினியால் துடிக்கிறார்கள். அவர்களுக்கு வேலை இல்லை; வருமானம் இல்லை; சம்பளம் இல்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் துடிக்கிறார்கள். அதாவது பசி, பட்டினி என்ற சமூக நோயால் அவர்கள் துடிக்கிறார்கள். இதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் பசியால்- பட்டினியால் வாடும் போதும் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். எல்லோரும் சேர்ந்து உதவ வேண்டும். தனித்தனியாக உதவிகள் செய்துகொண்டு இருப்பீர்கள். எல்லோரும் சேர்ந்து ஒருங்கிணைந்து, ஒன்று சேர்ந்து உதவ வேண்டும்!

‘ஒரு கை ஓசையாகாது - தனிமரம் தோப்பு ஆகாது’ என்று சொல்வார்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவ வேண்டும்!. அதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம் என்று நினைக்கிறேன்!. பசியால் வாடும் உறவுகள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர், குறிப்பாக ஏழை-எளிய மக்களுக்கு உதவ வேண்டும். முதியோர்கள், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கும் நிச்சயம் உதவ வேண்டும். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏ, எம்பி, இளைஞர் அணி, மகளிர் அணி என பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், திமுகவினரும் ஊர் ஊராகப் போய், தெருவில் நின்று, வீடு வீடாகப் போய் செய்து வரும் உதவியை நானும் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். உங்களில் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது!

‘’எந்தத் துன்பம் வந்தாலும், ஆட்சியிலிருந்தாலும் இல்லை என்றாலும் திமுக காப்பாற்றும்’’ என்ற நம்பிக்கையை மக்களுக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இப்படி தனித்தனியாக நீங்கள் செய்து கொண்டு வரும் உதவிகளை ஒட்டு மொத்தமாக ஒருங்கிணைக்கின்ற முயற்சி தான்-’’ஒன்றிணைவோம் வா’’!.
 எந்தப் பேதமும் இல்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து, பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவுவோம்!. அடுத்து வருகிற சில வார காலத்துக்கு நாம் ஒன்றிணைந்து ஏழைகளுக்குப் பசியாற்றும் பெரும்பணியைச் செய்தாக வேண்டும். திமுகவினர்  அனைவரையும் ‘’ஒன்றிணைவோம் வா’’ என்று அழைக்கிறேன்.நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், நான் உங்களுடன் பயணிப்பேன்!

எங்காவது சிரமங்கள், தொல்லைகள், நெருக்கடிகள் ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக எனது அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த உயிர்காக்கும் பணியில் ஆர்வமாக இருப்பவர் அனைவரையும் நம்மோடு ஒருங்கிணைத்து, ஒன்று சேர்த்துக் கொண்டு பணியாற்றுங்கள்!. எல்லாவற்றுக்கும் மேலாக, திமுகவின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இணைப்பு பாலமாகவும் பக்க பலமாகவும் இருந்து, அவர்கள் இந்தப் பேரிடரிலிருந்து மீள்வதற்கான வலிமையைத்  தரும் வகையில் செயல்படுங்கள்! “ஒருங்கிணைவோம்! உணவு தருவோம்! உயிரூட்டுவோம்! பசியில்லாத சமுதாயம் அமைய உறுதியேற்போம்! அதற்கு, ஒன்றிணைவோம் வா!” இவ்வாறு அவர் உரையாற்றியுள்ளார்.

அதன் பின்னர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் செய்தியின் விவரம் பின்வருமாறு: நெருக்கடியை வென்றெடுக்க ஒரே வழி மக்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் கைகோர்ப்பது தான். மக்கள் வழங்கும் ஆதரவு மூலம் தேவைப்படும் அனைவருக்கும் உதவிகள் சென்றடைந்து அவர்கள் காப்பாற்றப்படுவதை உறுதி செய்வோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : corona crisis ,MK Stalin ,crisis ,Corona , Corona, video footage, talk by MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...