×

195க்கும் மேற்பட்ட நாடுகள் ஆடிப்போன நிலையில் கொரோனா ‘அட்டாக்’ இல்லாத 15 நாடுகள் எவை?.... தகவல்களின் உண்மை தன்மையில் தொடரும் சந்தேகம்

நியூயார்க்: கொரோனாவால் 195க்கும் மேற்பட்ட நாடுகள் ஆடிப்போன நிலையில், கொரோனாவால் பாதிக்காத 15 நாடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இருந்தும், அந்த நாடுகள் தங்களது பாதிப்பு தகவல்களில் உண்மை தன்மையில் சந்தேகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு உள்ளநிலையில், கொரோனாவின் அறிகுறி இல்லாதா 15 நாடுகள் பட்டியலும் உள்ளன. இதன்படி, ஆசிய கண்டத்தில் வடகொரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் கொரோனா தாக்கம் இல்லை. ஆப்பிரிக்க கண்டத்தில் லெசோத்தோ, காமரோஸ் நாடுகளில் கொரோனா பரவல் இல்லை. ஓசியானா எனப்படும் பெருங்கடல் பகுதியில் உள்ள 8 தீவுகளில் யாருக்கும் கொரோனா பரவவில்லை என்று தெரியவந்துள்ளது. இதேபோல, மக்களின் நிரந்தர குடியேற்றம் இல்லாத அண்டார்டிகாவிலும் கொரோனா பாதிப்பு இல்லை.

கொரோனானால் பாதிக்காத  நாடுகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அந்த நாடுகள் பாதிப்புகளில் இருந்து தப்பியுள்ளன. சுமார் இரண்டரை கோடி மக்கள் தொகையைக் கொண்ட வடகொரியா, கடந்த ஜனவரியிலேயே சீன எல்லையை மூடியது. வெளிநாட்டினரின் வருகைக்கு தடைவிதித்தது. எனினும், மோசமான சுகாதார கட்டமைப்பு, போதுமான அளவில் பரிசோதனை திறன் இல்லாதது ஆகிய காரணங்களால் வடகொரிய அரசின் தகவல்களை நம்ப முடியவில்லை என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். துருக்மெனிஸ்தானை பொறுத்தவரை, மார்ச் மாதத் தொடக்கத்திலேயே தனது எல்லைப் பகுதிகளை மூடியது. சீனாவுக்கு செல்லும் விமானங்களை பிப்ரவரி தொடக்கத்திலேயே ரத்துசெய்தது. இந்த நாட்டின் சுகாதாரத் துறை தகவல்களிலும் நம்பகத்தன்மை இல்லை என்று கூறப்படுகிறது. தஜிகிஸ்தான் பகுதியில் பல்வேறு சந்தேக மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆனால், இவை நிமோனியாவால் ஏற்பட்டவை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துவருகிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள லெசோத்தோ, காமரோஸ் நாடுகளிலும் கொரோனா பதிவாகவில்லை. எனினும், அண்டை நாடுகளில் நோய் பரவல் உள்ள நிலையில், உரிய சோதனை முறைகள் இல்லாததால் நோய் கண்டறியப்படாமல் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெருங்கடல் தீவான சாலமனில் 6 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு மார்ச் 25ம் தேதி பொது அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. டோங்கா, வனவட்டு தீவுகள், மார்ச் மாதம் முதலே கொரோனா அதிக பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வான்வழி மற்றும் கடல்வழியாக மக்கள் வருவதற்கு தடைவிதித்துள்ளன. சமோவா, பாலாவ், துவாலு, நவ்ரு, கிரிபதி, மார்ஷல், மிக்ரோனேசியா ஆகிய தீவுகளும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தடைவிதித்ததால் வைரஸ் பரவல் இல்லாத நிலையை எட்டியுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை, சிக்கிம், தாத்ரா-நாகர் ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவு ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வூஹானில் பரவிய கொரோனா, இன்று உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும்நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்பான தரவுகளை பெரும்பாலான நாடுகள் மறைத்து வருவதாகவும், அடுத்த பட்டியல் கொரோனா வேகம் குறைந்தபின் வெளியாகும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வருகிறது. அதன்படியே சமீபத்தில் சீனா தனது கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை திடீரென உயர்த்தி கூறியது. இது, உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.


Tags : countries ,Corona 'Attack , Corona, 15 countries
× RELATED இணையவழிக் குற்றங்கள் அதிகம்...