×

சேலத்தில் ட்ரோன் கேமராவை கண்டதும் ஏரியில் மீன்பிடித்த இளைஞர்கள் ஓட்டம்: வீடியோ வெளியிட்டு போலீசார் விழிப்புணர்வு

சேலம்: சேலத்தில் ட்ரோன் கேமராவை கண்டதும், ஏரியில் மீன்பிடித்த இளைஞர்கள் தலைதெறிக்க ஓடும் வீடியோவை வெளியிட்டு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பொதுமக்களின் நடமாட்டம் பல இடங்களில் காணப்படுகிறது. அத்துடன், இளைஞர்கள் ரகசிய இடத்தில் கூடி சமைத்து சாப்பிடுவது, சூதாடுவது, கிரிக்கெட், கேரம், கோலி ேபான்ற விளையாட்டுகளை விளையாடுவது என தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து வானத்தில் வட்டமிடும் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி, இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சேலம் குரங்குச்சாவடி மலையடிவாரத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த இளைஞர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்டுபிடித்து போலீசார் எச்சரித்தனர்.

இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தற்போது அதேபோல, சேலத்தாம்பட்டி ஏரியில் மீன்பிடித்து கொண்டிருந்த இளைஞர்கள் ட்ரோனை கண்டதும் தெறித்து ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது. சுமார் 2 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், சேலத்தாம்பட்டி ஏரிக்குள் 20க்கும் மேற்பட்டோர் மீன் பிடித்து கொண்டிருக்கின்றனர். ட்ரோன் கேமராவை கண்டதும், ஏரியிலிருந்து வெளியேறிய அவர்கள் தலைத்தெறிக்க ஓடி, அங்குள்ள முட்புதருக்குள் புகுந்துகொள்கின்றனர். இதேபோல், ஏரியின் மத்தியில் உள்ள குன்றில் சிக்கிய 3 பேர், தண்ணீருக்குள் மூழ்கியும், தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள கூடாது என்பதற்காக, தலையை வேறுபக்கமாக திருப்பியும் கொள்கின்றனர். நீண்டநேரம் கேமரா அவர்களை வட்டமிடுவதால், பின்னர் வேறு வழியின்றி, ஏரியிலிருந்து வெளியேறுகின்றனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Tags : Youngsters ,lake ,Salem ,Salem: Police , Salem, drone camera, youth flow
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு