×

காற்றில் பறந்து போன அரசின் நோக்கம்: நெல்லையில் `அசைவம்’ வாங்க திருவிழாபோல் திரண்ட கூட்டம்

நெல்லை: நெல்லை டவுன் உழவர்சந்தை, பாளையங்கோட்டை, பேட்டையில் ஆடு, கோழி மற்றும் மீன் இறைச்சி வாங்குவதற்காக ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக காய்கறி மார்க்கெட், மற்றும் இறைச்சிக்கடைகளை பல்வேறு பொது இடங்களில் மாற்றி அமைத்து வருகின்றனர். நெல்லை டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வெவ்வேறு இடங்களில் கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன. அந்த கடைகளில் பொதுமக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக அனைத்து அசைவ விற்பனை கடைகளும் டவுன் கண்டியப்பேரி உழவர்சந்தை வளாகத்தில் மாற்றப்பட்டு உள்ளது.

இதேபோல் பேட்டையில் மாநகராட்சி குடிநீர் தொட்டி அருகிலும், பாளையங்கோட்டையில் கோர்ட் அருகேயுள்ள பெல் மைதானத்திற்கும் இறைச்சி கடைகள் மாற்றப்பட்டுள்ளன. நேற்றுறு ஞாயிறு என்பதால் அசைவ உணவு பிரியர்கள் காலை 6 முதலே இங்குள்ள கடைகளுக்கு திரண்டு வரத் தொடங்கினர். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகமானது. மீன், கோழி, ஆடு, மாடு உள்ளிட்டவை விற்பனை செய்ய ஒவ்வொரு இடத்திலும் 20க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கடை முன்பும் கூட்டம் அதிக அளவில் நின்றதால் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் அவர்கள் வந்திருந்த இருசக்கர வாகனங்களும் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தப்பட்டன. இதனால் ஒருவரையொருவர் தொடாமல் நடந்து செல்வதற்கு கூட இடம் கிடைக்காத அளவுக்கு நெரிசல் காணப் பட்டது.

ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் அங்கு திரண்டதால் கொரோனாவுக்கு எதிரான சமூக இடைவெளி அறிவிப்பு காற்றில் பறந்தது. கையில் மைக்குடன் நின்ற மாநகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது இடைவெளியை கடைப்பிடிக்கும்படி அறிவிப்பு செய்தாலும் அது காற்றில் கரைந்து போனது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றாக கூடக்கூடாது என்பதற்காகத்தான் காய்கறி, இறைச்சி கடைகளை வேறு இடத்திற்கு மாநகராட்சி மாற்றியது. ஆனால் அந்த நோக்கமே நிறைவேறாத வகையில் தற்போது கடைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர். ஒரே இடத்தில் அசைவ உணவு விற்பனை கடைகள் செயல்பட அனுமதித்த மாநகராட்சி அலுவலர்கள், வாகனங்களை நிறுத்தவும் சமூக இடைவெளியை கண்காணிக்கவும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இப்பகுதியிலிருந்து இறைச்சி கழிவுகளும் முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை.

பொதுமக்கள் கடைகளுக்கு சென்று வர வாரம் 2 நாட்கள் மட்டும் அனுமதிப்பதுபோல் இறைச்சி கடைகள் செயல்படுவதற்கும் முறை வைத்து அனுமதி அளிக்கலாம். சமூக விலகலை கடைப்பிடிக்காத பலசரக்கு கடைகளை சீல் வைப்பதாகவும், வியாபாரிகள் மீது வழக்கு பதியப்படும் என்றும் எச்சரித்துள்ள மாவட்ட நிர்வாகம் இறைச்சி கடைகளிலும் இவ்வாறு சமூக விலகலை கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக உாிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்றனர்.

இறைச்சி கடைக்கு சீல்
நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்தில் ஆங்காங்கே செயல்பட்டு வந்த மட்டன், சிக்கன் கடைகள் நோய் தொற்றை தடுக்கும் வகையில் பாளை நீதிமன்ற வளாகத்திற்கு எதிரேயுள்ள மைதானத்திற்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் கடந்த வாரம் மாநகராட்சி உத்தரவினை மீறி செயல்பட்ட கடைகளை தமிழக அரசின் கொரோனா தடுப்பு சிறப்பு குழு அதிகாரி கருணாகரன் சீல் வைத்தார். இந்நிலையில் பாளையில் செயல்படும் சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலகம் அருகே மட்டன் கடை விதிகளை மீறி செயல்படுவதாக மாநகராட்சி கமிஷனர் கண்ணனுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இதை தொடர்ந்து பாளை மண்டல உதவி கமிஷனர் பிரேம் ஆனந்த் உத்தரவின் பேரில், பாளை பகுதி சுகாதார ஆய்வாளர் இளங்கோ, சுகாதார மேற்பார்வையாளர் மாரியப்பன், மாநகராட்சி தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் வசந்த் ஆகியோர் அங்கு சென்று மட்டன் கடையை சீல் வைத்தனர்.

Tags : state ,festival ,crowd ,government , Paddy, anime, crowd
× RELATED ரம்ஜான் பண்டிகை: அரசு போக்குவரத்துக்...