×

சுங்குடி நகரத்துக்கு வந்த நெருக்கடி; ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு; ரூ.5 கோடி சேலைகள் தேக்கம்: கொரோனாவால் முடங்கிய சின்னாளபட்டி நெசவாளர்கள்

சின்னாளபட்டி: கொரோனா பாதிப்பால் சுங்குடி நகரமான சின்னாளபட்டியில் கடந்த ஒரு மாதத்தில் ரூ.10 கோடி அளவுக்கு ஜவுளி வர்த்தகம் பாதிப்பு அடைந்துள்ளது. ரூ.5 கோடி மதிப்புள்ள சுங்குடி சேலைகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக நெசவாளர்கள் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி கைத்தறி நெசவாளர்கள் நிறைந்த நகரமாகும். தமிழகத்தில் அதிக அளவில் கைத்தறி மற்றும் காட்டன் சுங்குடி சேலைகள் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரியாக சின்னாளபட்டியில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சுங்குடி சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஒடிசா, பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும், தமிழகத்தில் அனைத்து முன்னனி ஜவுளி கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. கோடை காலத்தில்தான் சுங்குடி சேலைகளுக்கு கஞ்சி ஏற்றப்பட்டு வெயிலில் உலர வைக்கப்பட்டு உற்பத்தி செய்வது வழக்கம். தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக சின்னாளபட்டியில் பிரிண்டிங் பட்டறைகள் பூட்டப்பட்டுள்ளன.

நெசவாளர்கள் நெய்யும் தறிக்கூடங்களும் பூட்டியே கிடக்கின்றன. இதுதவிர, வீடுகளில் தனியாக தறிபோட்டு நெய்யும் நெசவாளர்களுக்கு பாவு, சாயம் ஏற்றிய கலர் நூல், நாடா மற்றும் தறி உபகரணங்கள் கிடைக்காததால் அவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பிரிண்டிங் பட்டறைகளில் சேலைகள் பிரிண்டிங் செய்ய முடியாமல் குவிந்து கிடக்கின்றன. ஜவுளி கடைகளில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சேலைகளை பண்டல் போடமுடியாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒருமாத காலத்தில் ரூ.10 கோடிக்கு ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதோடு ரூ.5 கோடி வரையிலான சுங்குடி சேலைகள் கடைகளில் விற்பனையாகாமல் தேங்கி நிற்கின்றன. இதனால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் சுங்குடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேட்டுப்பட்டியை சேர்ந்த கைத்தறி நெசவாளர் ஆறுமுகம் கூறுகையில், ``ஒரு மாத காலமாக நெசவாளர்கள் யாரும் தறியில் உட்கார்ந்து நெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.800 வரை சம்பாதித்து வந்த நாங்கள், இன்று வீட்டிலேயே முடங்கி கிடக்கிறோம்.

எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்கிறார். சவுராஷ்டிரா காலனி சுங்குடி பட்டறை சேர்ந்த சுரேஷ் கூறுகையில், ``சின்னாளபட்டியில் உள்ள பிரிண்டிங் பட்டறைகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு சேலை வரை பிரிண்டிங் செய்து கஞ்சி போட்டு தேய்ப்பதற்கு அனுப்பி வைப்போம். ஒருமாத காலமாக சின்னாளபட்டி வட்டாரத்தில் எந்த ஒரு பிரிண்டிங் பட்டறையும் செயல்படவில்லை’’ என்றார். வள்ளுவர் காலனியை சேர்ந்த பழனிச்சாமி கூறுகையில், ``சின்னாளபட்டியில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். சமூக விலகலோடு செய்யும் இந்த தொழிலுக்கு முறையாக நூல் மற்றும் பாவு (கலர் நூல்) கிடைக்காததால், நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பழநி அருகே உள்ள கொழுமம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து தான் தறி உபகரணங்கள் மற்றும் நூல்கள் வரும். அதை கொண்டு வருவதற்கு கைத்தறி நெசவாளர்களுக்கு நலவாரியம் மூலம் நிவாரண உதவி வழங்க வேண்டும்’’ என்றார்.

சின்னாளபட்டி வட்டார சுங்குடி சேலை உற்பத்தியாளர் வட்டார ஜவுளி மற்றும் சுங்குடி உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த ஆனந்தன் கூறுகையில், ``சின்னாளபட்டியில் ஒருமாத காலமாக சுங்குடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதோடு ரூ.5 கோடி வரையிலான சுங்குடி சேலைகள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப முடியாமல் தேங்கி கிடக்கிறது’’ என்றார்.

‘ரூ.5 ஆயிரம் நிவாரணம் உடனே வழங்கவேண்டும்’
திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏவிடம் கேட்டபோது, ``கொரோனா பாதிப்பால் சின்னாளபட்டியில் கைத்தறி நெசவு தொழிலும், சுங்குடி தொழிலும் முடங்கிவிட்டது. கைத்தறி நெசவாளர்கள், சுங்குடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க மத்திய, மாநில அரசுகள் நலவாரியம் மூலம் ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி உடனடியாக வழங்க வேண்டும். மேலும் நெசவாளர்கள் தறியில் நூல் பூட்டி நெய்ய வெளிமாவட்டங்களிலிருந்து நூல் மற்றும் பாவு, நாடா உட்பட தறி உபகரணங்கள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் வாகன வசதி மற்றும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார்.

Tags : weavers ,Crisis ,Chinnalapatti ,City of Chungudi , Sukkudi, trade impacts, stagnation
× RELATED சின்னாளபட்டி சாலையில் தேங்கும்...