×

ஊரடங்கு தளர்த்தப்பட உள்ள நிலையில் சரக்கு போக்குவரத்து கட்டணம் கிடுகிடு: வேலைக்கு வர தயங்கும் டிரைவர்கள்

புதுடெல்லி: ஊரடங்கு தளர்த்தப்பட உள்ள நிலையில், சரக்கு போக்குவரத்துக்கு கட்டணங்கள் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.   நாடு முழுவதும் கடந்த மாதம் 25ம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு, வரும் மே 3ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில், தொழிற்சாலைகள், கட்டுமானம் உட்பட சில பிரிவுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிகள் அளிக்கப்படுகின்றன.   இதனால், டிரக்குகள் மற்றும் லாரிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. இருப்பினும், பெரும்பாலான டிரக் டிரைவர்கள் வேலையில் சேர முன்வரவில்லை என கூறப்படுகிறது. சம்பளத்தை தவிர ஊக்கத்தொகை வழங்க முன்வந்தும், டிரைவர்கள் பலர் வேலையில் சேர மறுத்து வருகின்றனர். இதனால் சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என, சரக்கு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் தெரிவிக்கின்றனர்.

 இதுகுறித்து அனைத்து இந்திய மோட்டார் போக்குவரத்து சங்கத்தினர் கூறுகையில், புனேயில் இருந்து டெல்லிக்கு திராட்சை பழங்களை ஏற்றி வரும் டிரக்கிற்கு வாடகையாக ₹70,000 வசூலிக்கப்படும். ஆனால், தற்போது இந்த கட்டணம் ₹90,000 ஆக உயர்ந்துளளது. திரும்பி வரும்போது லோடு கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அதோடு, வாகனங்கள் இடையில் பழுது ஏற்பட்டால் அதை சரி செய்வதும் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியம் இல்லை. அவ்வாறு பழுதானால் சில நாட்கள் கூட வாகனத்தை சரக்குடன் பாதி வழியிலேயே நிறுத்தி வைத்திருக்க நேரிடும்’’ என்றனர். இதுபோல், உணவு தானியங்ள் அல்லது பூச்சி மருந்து, மருந்துகள் ஆகியவற்றை ஏற்றிச்செல்லும் பெரிய சரக்கு வாகனங்களுக்கு டெல்லி முதல் கொல்கத்தா வரை செல்ல ₹60,000 வசூலிக்கப்பட்டது. இது தற்போது ₹95,000 ஆக உயர்ந்துள்ளது என சரக்கு போக்குவரத்து நடத்துவோர் தெரிவிக்கின்றனர்.

 அதோடு, தென் மாநிலங்களுக்கு திரும்ப வேண்டிய சரக்கு போக்குவரத்து வாகனங்கள் பல டெல்லியிலேயே சரக்குகளை இறக்கிவிட்டு திரும்ப வர முடியாமல் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன. மாநில இன்று முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், மாநில எல்லைகளிலும் கெடுபிடிகள் உள்ளன. எனவே, கூடுதல் தொகை தர முன்வந்தும் டிரைவர்கள் வர தயங்குகின்றனர். எனவே, தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடங்கினாலும் இவற்றை சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.



Tags : drivers , Inventory freight, curfew: drivers , reluctant , work
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...