×

2 ஆண்டு வரிச்சலுகை தந்தால் சிறு, குறு தொழில்கள் மீளும்: அறிவழகன், பொருளாதார வல்லுனர்

கொரோனாவால் பல நாடுகளில் பொருளாதாரம் முடங்கி போய் உள்ளது. இந்தியாவிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பெரிய பேரிடர் வரும் நேரத்தில் மத்திய அரசு பெரிய குழு ஒன்றை அமைத்து இருக்க வேண்டும். இந்த குழு என்ன நடக்கிறது என்பதை பிரதமர், ஜனாதிபதியிடம் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாமல் விட்டதன் விளைவாக இந்தியா பெரும் பிரச்னையை சந்தித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஏற்படும் பேரிடரை கண்டு கொள்ளாமல் விட்டது மத்திய அரசின் தோல்வி என்று தான் சொல்ல வேண்டும். உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் வந்து வேலை செய்கின்றனர். அதே போன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வசிப்போரும் வேலை செய்த இடத்திலேயே சிக்கிக் கொண்டனர். அவர்களால் எங்கேயும் நகர முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களது தொழிற்சாலை, தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அவர்களை கவனிக்காததால் எல்லோரும் அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லோரும் உயிர் பிழைத்தால் போதும் என்று சொந்த ஊர் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டனர். இனி, லாக் டவுன் முடிந்த உடனே அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று விடுவார்கள்.

2019-20ல் நாட்டின் மொத்த ஜிடிபி வளர்ச்சி அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் தான் எதிர்பார்க்கிறோம். 9 மாதம் கணக்கை எடுத்துக் கொண்டால் 2 சதவீதம் தான் இருக்கும். வரும் 2020-2021ல் 7 சதவீதம் உயரும் என்று மத்திய அரசு கூறுகிறது. 2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் உயர வாய்ப்பே இல்லை. கொரோனா பாதிப்புக்கு முன்னரே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் சிறுகுறு தொழில் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இந்த தொழில்களை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, கொரோனா வந்த பிறகு இந்த தொழில்களை மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 இ-காமர்ஸ் தொழில் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது. காரணம், ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்தால் கூட டெலிவரி செய்ய வரும் நபர்கள், பேக்கிங் செய்த நபர்களுக்கு பாதிப்பு இருக்குமோ என்ற பயத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வது குறையும். இன்னும் 1 ஆண்டுக்கு இந்த தொழில் படுத்து விட வாய்ப்புள்ளது. மேலும், பெரிய, ெபரிய மால்களில் கூட்டம் கூட்டமாக போய் வாங்கவும் வாய்ப்பு இல்லை. இனிமேல் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது. பெரிய பட்ஜெட்டில் யாரும் இனி படம் எடுக்க மாட்டார்கள். அதே போன்று வெளிநாடுகள் செல்வது குறையும். அதனால், சுற்றுலா தொழிலும் கடுமையாக பாதிக்கப்படும்.

நடுத்தர, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் நிலை மிகவும் கஷ்டம் தான். வரும் நாட்களில் பல நிறுவனங்கள் மூட வாய்ப்புள்ளது. எனவே, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை சரி செய்ய சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன், 2 ஆண்டு வரி சலுகை கொடுத்தால் மீள வாய்ப்புள்ளது. இந்த கொரோனாவிற்கு பிறகு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 40 கோடி மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் அடுத்து சட்ட விரோத செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது. நாட்டில் உள்ள 60 கோடி தினக்கூலிகளின் கதி பரிதாபகரமானது. எனவே, அரசு சார்பில் ஒரு குழு அமைத்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு  தேவையான உதவியை செய்ய தயாராக இருக்க வேண்டும்.

ஜிஎஸ்டியால் சிறுகுறு தொழில் அதளபாதாளத்திற்கு சென்று விட்டது. இந்த தொழில்களை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, கொரோனா வந்த பிறகு இந்த தொழில்களை மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : businesses ,economist , 2 ஆண்டு வரிச்சலுகை, சிறு, குறு தொழில்கள் மீளும், அறிவழகன், பொருளாதார வல்லுனர்
× RELATED பொருளாதார நிபுணர் ஆனந்த்...