×

திருவண்ணாமலையில் தியானம் செய்வதற்காக மலைஉச்சிக்கு சென்ற ரஷ்ய தம்பதியை ட்ரோன் உதவியுடன் மீட்ட போலீசார்

* மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளதாக எஸ்பி பேட்டி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தியானம் செய்வதற்காக மலைஉச்சிக்கு   சென்ற ரஷ்ய நாட்டு தம்பதியை போலீசார் ட்ரோன் கேமரா மூலம் மீட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னதாக வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
நேற்று காலை ேபாலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது, மலைஉச்சியில் 2 நபர்கள் செல்வது தெரியவந்தது. உடனே, வெளிநாட்டினர் 2 பேரையும் மீட்டு அழைத்து வந்தனர். அவர்களிடம் எஸ்பி சிபிசக்கரவர்த்தி விசாரணை நடத்தினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை கிரிவலப்பாதை மலையில் 2 நபர்கள்  இருப்பது ட்ரோன் கேமராவில்  தெரிந்தது.  

அவர்களிடம் விசாரித்ததில் ரஷ்ய நாட்டை சேர்ந்த விக்டர்(29), டாட்டியானா(24) கணவன், மனைவி என்பதும், இவர்கள் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்ததும் தெரியவந்தது. இவர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளனர். நாளொன்றுக்கு 300 வீதம் வாடகை வசூலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களிடம் போதிய பணம் இல்லாததால் ரமணாஸ்ரமத்தில் வந்து உணவு சாப்பிட்டுள்ளனர். மீண்டும் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல விமான சேவையும் இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் மனவேதனையடைந்த இருவரும், மலை உச்சிக்கு சென்று தியானம் செய்ய முயன்றது தெரியவந்தது. தற்போது, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Russian ,hilltop ,Thiruvannamalai , Thiruvannamalai, Meditation, Drone, Corona
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!