×

டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு போக்குவரத்து வசதிகளை உருவாக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: புற்றுநோய், டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு போக்குவரத்து வசதிகளை உருவாக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:
கொரோனாவுக்கு எப்படி முன்கூட்டியே சிகிச்சை அளிக்கவேண்டுமோ, அதுபோல புற்றுநோயாளிகளுக்கும் முன்கூட்டியே சிகிச்சை அளிக்கவேண்டும். டயாலிசிஸ், கீமோதெரபிக்கு 102 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என சமீபத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். ஆனால், நடைமுறையில் 102 ஆம்புலன்ஸ் பயன்படுத்துகிற வாய்ப்பை நோயாளிகளால் பெற முடியவில்லை. மக்கள் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது டயாலிசிஸ் செய்துகொள்ள போக்குவரத்து வசதி இல்லாமல் பல நோயாளிகள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.

எந்தவித வாகன வசதியும் இல்லாமல் நோயாளிகள் டயாலிசிஸ் செய்ய முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்நாடக, ஆந்திர அரசுகள் ஓலா என்கிற வாடகை வாகன சேவை வழங்கும் தனியார் நிறுவனத்தோடு இத்தகைய அவசர சிகிச்சை பெறுபவர்களுக்கு போக்குவரத்து சேவை செய்து கொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அந்த சேவையை அந்த மாநில மக்கள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.அதேபோல தமிழகத்திலும் புற்றுநோய் உள்ளிட்ட டயாலிசிஸ் சிகிச்சை பெறவேண்டிய நோயாளிகளுக்கு போக்குவரத்து வசதிகளை உருவாக்க வேண்டும். இதற்கு  ஓலா, ஊபர் போன்ற தனியார் வாடகை வாகன வசதிகளை பயன்படுத்துவதற்கு உரிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இந்த கோரிக்கையிலுள்ள தீவிரத்தன்மையை மனிதாபிமான உணர்வோடு புரிந்துகொண்டு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : KS Alagiri ,transport facilities , Dialysis treatment, patients, transport facilities, KS Alagiri
× RELATED தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு...