×

திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அமல் கேரளாவில் இன்று ஊரடங்கு தளர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று முதல் ஊடரங்கு கட்டுப்பாடுகள் தளர்ப்படுகின்றன. இது குறித்து கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில்  மொத்தம் உள்ள 14 மாவட்டங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.  கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்கள் நோய்  தீவிரம் அதிகமுள்ள மாவட்டங்கள் என்பதால் இவை சிவப்பு மண்டலமாக  அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் மே  3ம் தேதி வரை ஊரடங்கு சட்டம் கடுமையாக அமலில் இருக்கும்.  ஆரஞ்சு ஏ, ஆரஞ்சு  பி மற்றும் பச்சை ஆகிய மண்டலங்களில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு  சட்டத்தில் சில நிபந்தனைகளை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு பி  மண்டலத்திலுள்ள ஆலப்புழா, திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு மற்றும்  திருச்சூர் ஆகிய மாவட்டங்களிலும், பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள  கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களிலும் இன்று முதல் ஊரடங்கு  சட்டத்தில் பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்
படுகின்றன. இந்த இரு மண்டலங்களில்  உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று முதல் தனியார் வாகனங்கள் செல்ல போலீஸ்  அனுமதி தேவையில்லை. ஆனால் மாவட்டம் விட்டு வெளியே செல்ல முடியாது. மருத்துவ  தேவை உள்பட அவசர தேவைகளுக்கு மட்டும் மாவட்ட எல்லை அல்லது மாநில எல்லைகளை  கடந்து செல்ல அனுமதி உண்டு.

சுகாதாரத்துறை, விவசாயம், மீன்பிடி தொழி, தோட்டம்,  கால்நடை பாதுகாப்பு, பொருளாதார துறை, ஆன்லைன் கல்வி, தொழில் உறுதி திட்டம்  ஆகிய துறைகளின் செயல்பாடுகளுக்கு அனுமதி உண்டு. அரசு மற்றும் தனியார் துறை  நிறுவனங்கள் செயல்படலாம். அத்தியாவசிய கடைகள் மற்றும் ஓட்டல்கள் காலை 7 மணி  முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமான தொழிலுக்கு  அனுமதி உண்டு. ஒற்றை இலக்க எண்களில் முடியும் பதிவு எண் கொண்ட வாகனங்கள்  திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும், பூஜ்யம் முதல் இரட்டை இலக்க  எண்களில் முடியும் பதிவெண் கொண்ட வாகனங்கள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய  நாட்களிலும் செல்லலாம். ஆரஞ்சு ஏ மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள  பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 24ம்  தேதி முதல் நிபந்தனைகள் தளர்த்தப்படுகிறது.

மிதவை தனிமை வார்டுகள்
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கேரளா திரும்புபவர்களை தனிமையில் வைக்க, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அறைகள் தயார்ப்படுத்தப்பட்டு உள்ளன. ஆலப்புழா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான படகு இல்லங்கள் உள்ளன. சுற்றுலா பயணிகள்தான் பெரும்பாலும் இந்த படகு இல்லங்களை பயன்படுத்தி வருகின்றனர். காஷ்மீருக்கு அடுத்த படியாக ஆலப்புழா படகு இல்லங்கள் மிகவும் பிரசித்திபெற்றவையாகும். இந்த நிலையில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கேரளா திரும்புபவர்களை தனிமை கண்காணிப்பில் வைத்திருக்க, 2,000 படகு இல்லங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.



Tags : Kerala ,districts ,curfew ,Thiruvananthapuram Amal Kerala ,Thiruvananthapuram , Amal Kerala , today , 7 districts , Thiruvananthapuram
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...