×

கொரோனா வைரஸ் எங்களை அகதிகளாக்கிவிட்டது ஆஸ்திரேலியாவில் என்ன வேலை செய்யப்போகிறோம் என தெரியவில்லை

சென்னை: கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில்  வசித்து வந்த 374 ஆஸ்திரேலியர்கள் சென்னையிலிருந்து தனி சிறப்பு விமானத்தில் தங்களது நாட்டிற்கு திரும்பிச் சென்றனர். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு  மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பயணிகள் விமான  சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவின் தென் மாநிலங்களில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஆஸ்திரேலியர்கள், ஆஸ்திரேலியா தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பத்தினர் பலர் தங்கள் சொந்த நாடான ஆஸ்திரேலியா திரும்ப அந்நாட்டு அரசிடம் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் விமான சேவை இல்லாததால் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலியா நாட்டு தூதரக அதிகாரிகள், இந்திய அரசுடன் பேசி, தனி சிறப்பு விமானத்தில் அழைத்து செல்ல அனுமதி பெற்றனர்.

அதன்படி ஆஸ்திரேலியாவிலிருந் தனி சிறப்பு விமானம் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தது. அப்போது அந்நாட்டு தூதரக அதிகாரிகள் 26 குழந்தைகள், 135 பெண்கள் உட்பட 374  ஆஸ்திரேலியர்களை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தனர். அனைத்து சோதனைகளும் முடிந்த பின்பு அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டு நேற்று மாலை 3 மணிக்கு சென்னையிலிருந்து ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகருக்கு புறப்பட்டு சென்றது. முன்னதாக அவர்கள் கூறுகையில், சென்னையில் தங்கள் பணியை விட்டு ஆஸ்திரேலியா செல்கிறோம். அங்கு எங்களுக்கு என்ன வேலை கிடைக்கும் என்று தெரியவில்லை, இந்த கொரோனா எங்களை அகதிகளாக்கிவிட்டது. இனி நிலைமை மாறி இங்கு வருவோமா என்பதே எங்களுக்குத் தெரியவில்லை என கண்ணீருடன் கூறிவிட்டுச் சென்றனர்.

Tags : refugees ,Australia , Corona virus, Australia
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...