×

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதி மக்களுக்கு உதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நேற்று பல்வேறு உதவிகளை வழங்கினார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், துறைமுகம் தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், 100 கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான 20 வகையான மளிகை மற்றும் உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.
தொடர்ந்து அவர் எழும்பூர் தொகுதிக்குட்பட்ட ஐந்து விளக்கு குயப்பேட்டையில் 200 மண்பாண்ட தொழிலாளர்கள், திரு.வி.க.நகர் தொகுதிக்குட்பட்ட டோபிகாணா பகுதியில் உள்ள 200 சலவைத் தொழிலாளர்கள், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கணினி பயிற்சி மேற்கொள்ளும் 200 பயனாளிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் கொளத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழே வசிக்கும் 12 ஆயிரம் பேருக்கு  திருவள்ளுவர் மண்டபம், வாரி மண்டபத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார். அடுத்ததாக, ‘அருணோதயா ஆதரவற்றோர் இல்லத்திற்கு’ தேவையான உணவுப் பொருள், மருந்துப் பொருட்களை  வழங்கினார். மேலும், உதவி கோரியிருந்த இரு பெண்களுக்கு காய்கறி விற்பனை செய்வதற்கு தள்ளுவண்டி வழங்கியதோடு, ராஜமங்கலம் காவல் நிலைய போலீசாருக்குத் தேவையான முகக்கவசங்கள், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார். இதனையடுத்து, வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள போர்ட் ஸ்கூல் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர், அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட முகப்பேர் கிழக்குப் பகுதி வீரமாமுனிவர் சாலையில் கழிவுநீர்  மற்றும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் 200 பேருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ மற்றும் எம்எல்ஏக்கள் ரவிச்சந்திரன், தாயகம் கவி, ரங்கநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : harbor ,Egmore ,Kolathur ,RVK Nagar ,Corona ,Villivakkam block ,MK Stalin ,Port ,Srivanka Nagar , Corona, Harbor, Egmore, Thrissur
× RELATED சென்னை எழும்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!!