×

மனதை உருக்கிய தாயன்புக்கு காவல்துறை மரியாதை: சபாஷ் டிஜிபி

ஐதராபாத்: தன்னை மறித்து போலீசார் சோதனை செய்தபோதும், வெள்ளந்தியாக போலீசாரிடமே தான் வாங்கிச் சென்ற குளிர்பானத்ைத ெகாடுத்து, ‘‘வெயிலில் கஷ்டப்படும் உங்களுக்குத்தான் இது முதலில் தேவை... சாப்பிடுங்கப்பா....’’ என்று தாயுள்ளத்தை காட்டிய பெண்ணுக்கு... அதிகபட்சமாக என்ன மரியாதை செய்துவிட முடியும்? ஆந்திரா மாநில டிஜிபி கவுதம் சவாங், உச்சபட்சமாக அந்த பெண்ணுக்கு சல்யூட் அடித்து தன் பெருந்தன்மையை வெளிப்படுத்தினார். ஆந்திராவின் சின்னஞ்சிறு நகரம் துனி. ஊரடங்கால் இங்கு மக்கள் நடமாட்டத்துக்கு பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே சுற்றுபவர்களை போலீசார் தடுத்து அவர்கள் வெளியே வந்ததற்கான காரணங்களை கேட்டுத்தான் தொடர்ந்து செல்ல அனுமதிக்கின்றனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு, 3 பெண்கள் ஒன்றாக செல்வதை, சாலையில் தடுப்பு அமைத்து கண்காணித்துக் கொண்டிருந்த போலீசார் கவனித்துள்ளனர். இதையடுத்து, அந்த பெண்களை அழைத்து காரணத்தை கேட்டனர். அவர்கள் அனைவருமே பள்ளி ஒன்றில் தினக்கூலி வேலை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என்று தெரியவந்தது. அப்போது பெரிய பை ஒன்றை வைத்திருந்த பெண்ணிடம், பையில் என்ன இருக்கிறது என்று ஒரு போலீஸ்காரர் கேட்டுள்ளார்.

அந்த பெண் சிரித்துக் கொண்டே, ‘‘ஐயா... வெயில் அடிக்குதுல்ல... அதனால என் குழந்தைகளுக்கு கூல்டிரிங்ஸ் வாங்கிட்டு போறேன்யா...’’ என்று கூறியபடி தன் பையில் இருந்த குளிர்பான பாட்டில்களை காட்டியுள்ளார். மேலும், ‘‘ஐயா... நீங்கதான் மண்டை பொளக்கிற வெயில்ல வேலை பார்க்கிறீங்க.... உங்களுக்குத்தான் தாகம் ரொம்ப அதிகமாக இருக்கும்.... நீங்க குடிங்கய்யா... நான் வேற வாங்கிட்டு போறேன்....’’ என்று போலீசாரிடம் கூறியுள்ளார். இதில் மனம் நெகிழ்ந்துப்போன போலீசார், ‘‘அம்மா... நீங்க குழந்தைகளுக்கு எடுத்துட்டு போங்க... அப்படியே இதையும் எடுத்துக் கோங்க...’’ என்று தங்களிடம் இருந்த ஒரு குளிர்பான பாட்டிலையும் அவரிடம் கொடுத்தனர்.இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, அந்த தாயின் அன்புக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த வீடியோ காட்சியை, ஆந்திர மாநில டிஜிபி கவுதம் சவாங்கும் பார்த்துள்ளார். உடனடியாக போலீசாரை அழைத்து அந்த தாயின் விவரத்தை சேகரிக்க உத்தரவிட்டுள்ளார். அவர் பெயர் லோகமணி என்றும் அவர் துனியின் புறநகர் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. உடனடியாக அவரை துனி காவல் நிலையத்துக்கு அழைத்து வரும்படி கூறிய டிஜிபி,  அந்த காவல் நிலையத்துடன் காணொளி காட்சி மூலம் பேசினார். அப்போது லோகமணி வெட்கத்துடன் துனி காவல் நிலையத்தில் இருந்த வீடியோ கேமரா முன்பு அமர்ந்திருந்தார். அவரிடம் பேசிய டிஜிபி, ‘‘அம்மா... உங்கள் அன்பு, எங்கள் மனதை உருக்கிவிட்டது. மக்கள் நலனுக்காக நாங்கள் பணி செய்து வருகிறோம். இதுபோன்ற நிலையில், உங்களைப்போன்றவர்களின் அன்பு எங்களை அதிகம் பணியாற்ற தூண்டும். உங்களைப்பற்றிய வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பார்த்தேன். உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. உங்களுக்கு என் சல்யூட்’’ என்று பெருந்தன்மையாக கூறினார். அந்த தாய் வெட்கத்துடன் அவரது மரியாதையை ஏற்றுக் கொண்டார். பெண்களை தாயாக மதிக்கும் நாட்டில், இந்த சம்பவம் இன்னொரு மைல்கல் என்றால் அது மிகையாகாது.

Tags : tribute mother ,Police tribute ,Sabash DGP Police ,Sabash DGP , Police tribute, mother , mind,Sabash DGP
× RELATED ராஜிவ்காந்தி நினைவிடத்தில்...