×

மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் 20 சதவீதம் குறைப்பா? நிதியமைச்சகம் விளக்கம்

* நாடு முழுவதும் மத்திய அரசு துறைகளில் பணியாற்றிய 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்.
* இவர்களுக்கு பென்ஷனை குறைக்கும் திட்டம் அல்லது நிறுத்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை.

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பால், மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பென்ஷனில் 20 சதவீதம் குறைக்கப்படுவதாக வெளியான தகவலை நிதியமைச்சகம் மறுத்துள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவுவதையடுத்து, கடந்த மாதம் 25ம் தேதி முதல் முழு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து தொழிற்சாலை,வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. மத்திய அரசுக்கும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில முக்கியநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எம்.பி.க்கள் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அம்சமாக, மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் பென்ஷன் 20 சதவீதம் குறைக்கப்படும் என்றும், சிறிது காலத்துக்கு நிறுத்திவைக்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஓய்வூதியதாரர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து, சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் சிலர் மத்திய நிதியமைச்சர் சீதாராமனிடம் டிவிட்டரில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துள்ள அவர், ‘‘பென்சனை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை’’ என கூறியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகமும் நேற்று விளக்கம் வெளியிட்டது. அமைச்சகத்தின் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், ‘‘மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பென்ஷனை குறைக்கும் திட்டமோ அல்லது நிறுத்தும் திட்டமோ ஏதும் இல்லை. இதுபோன்று பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. ஓய்வூதியதாரர்கள் நலனில் மத்திய அரசு முழுமையாக அக்கறை கொண்டு செயல்படுகிறது’’ எனத் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : government ,pensioners ,Finance Ministry , Federal Government, Pensioners, Pensions, Finance Ministry
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்