×

மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு; நிபுணர் குழு அறிக்கை இன்று தாக்கல்

சென்னை: ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அரசிடம் இன்று அறிக்கை அளிக்கிறது. இதை ஆய்வு செய்து முடிவுகளை முதல்வர் அறிவிப்பார். எனவே மறு உத்தரவு வரும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உயிர் இழப்புகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார்.

 ஏப்ரல் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவடைந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்தது. வைரஸ் தொற்றின் பரவல் குறையாததால் பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கையின்படி பிரதமர் மோடி. மே 3ம் தேதி வரை மீண்டும் 19 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட பிரதமர் மோடி, ஏப்ரல் 20ம் தேதி(இன்று) முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்படும், என தெரிவித்தார்.

அதன்படி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், ஏப்ரல் 20ம் தேதி(இன்று) முதல் விவசாயம் தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. மீன்பிடி தொழில், ஆன்லைன் வர்த்தகம், 50 சதவீத ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்கள், கிராமப்புற தொழிற்சாலைகளை திறக்கவும், 100 நாள் வேலை திட்டம், கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் செயல்படவும் அனுமதி தரப்பட்டது.

அதே சமயம், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சிகப்பு மண்டலங்களுக்கு (ஹாட்ஸ்பாட்) இந்த தளர்வு பொருந்தாது என்றும், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும், அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்தது. மேலும் அந்தந்த மாநில அரசுகளும் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்றின் பரவல் வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. நேற்று வரை 1,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 15 பேர் இறந்துள்ளனர். எனவே தற்போது ஊரடங்கை தளர்த்தினால், மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். எளிதில், எல்லோரும் எதோ ஒரு காரணம் சொல்லி வெளியே வரக்கூடும். எனவே மத்திய அரசு அறிவித்தாலும், பாதிப்பில் 3வது இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு உடனே தளர்வு ஏற்படுத்துவது அவ்வளவு எளிதில்லை. இதனால், இன்று முதல் எந்தெந்த நிறுவனங்கள் இயங்கும் என்பதில் தெளிவு இல்லாத நிலை இருந்து வந்தது.

இந்தநிலையில், தமிழக அரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:  மத்திய அரசு வெளியிட்ட ஆணையின்படி, 20ம் தேதிக்கு(இன்று) பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கென மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்து உள்ளது.

அந்த குழு தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை முதலமைச்சரிடம் இன்று தெரிவிக்க உள்ளது. இந்த குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுக்க உள்ளார். எனவே இது குறித்து தமிழ்நாடு அரசின் ஆணைகள் வெளியிடும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று அரசு தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : government ,Tamil Nadu ,Expert , Curfew restrictions continue until re-order: Tamil Nadu government announces; Expert panel report filed today
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...