×

சேவையை யாரும் பயன்படுத்தாததால் மாதாந்திர பாஸ் வாங்கியவருக்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும்: மெட்ரோ ரயில் பயணிகள் கோரிக்கை

சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிக்க மாதாந்திர பாஸ் எடுத்தவர்கள் ஊரடங்கு காரணமாக அவற்றை பயன்படுத்த முடியாததால், மே மாதத்தில் இருந்து கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் 1 லட்சம் பேர் வரை  பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், ரயில் சேவை, பேருந்து சேவை, மெட்ரோ ரயில் சேவை என அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் மாதாந்திர பாஸ், ட்ரிப் பாஸ் ஆகியவற்றை வாங்கியவர்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இதற்கான கட்டணத்தை திருப்பித்தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, மெட்ரோ ரயில் பயணிகள் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவு காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், ட்ரிப் பாஸ் பெரும்பாலான பயணிகளுக்கு காலாவதியாகி விட்டது. இதேபோல், மாதாந்திர பாஸ் எடுத்த பயணிகளும் கடந்த ஒரு மாதமாக மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தவில்லை.

இந்த சேவைகளுக்காக பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் திரும்ப வழங்க வேண்டும். அல்லது மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு சேவை தொடங்கும் போது ட்ரிப் பாஸ் மற்றும் மாதாந்திர பாஸ் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். இதேபோல், மெட்ரோ ரயில் வாகன நிறுத்தங்களில் ஒரு மாதமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் பயணிகள் தங்களின் வாகனங்களை எடுத்துச்செல்ல முடியவில்லை. எனவே, கட்டணம் ஏதுமின்றி வாகனங்களை எடுத்துச்செல்ல மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். மேலும், மாதாந்திர பார்க்கிங் பாஸ் வாங்கியவர்களுக்கும் அதற்கான கட்டணத்தை திரும்ப அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : no one ,buyer ,rail passengers ,Metro ,train commuters , Metro train commuters, extension, monthly,buyer as , service
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...