×

வைரஸ்களின் பிறப்பிடத்தை மீண்டும் திறப்பதா? சீனாவின் வெட் மார்க்கெட்டும் உலக நாடுகளின் வெறித்தனமும்

உலக மக்கள் தொகையை குறைக்கக் கூடிய சார்ஸ், கொரோனா போன்ற கொலைகார வைரஸ்களின் பிறப்பிடம் எது என்று கேட்டால் அது சீனாவின் ‘வெட் மார்க்கெட்’ எனப்படும் காய்கறி, இறைச்சி மார்க்கெட் தான். 2003ல் சார்ஸ் வைரஸ் பரவி உலக அளவில் 8,000 பேரை பலி கொண்டது. அந்த வைரஸ் மனிதனுக்கு தொற்றக் காரணம், சீனாவின் குயாங்டாங்க் மாகாணத்தில் விற்கப்பட்ட புனுகுப் பூனைகள்தான். அந்த பூனையிடமிருந்து மனிதனுக்கு சார்ஸ் வைரசை பரப்பிய பெருமை சீனாவின் இந்த மார்க்கெட்டையே சேரும். அதே போல், தற்போது 1.5 லட்சம் பேரை கொன்று குவித்த கொரோனாவை பரப்பியதும் இந்த சீன ‘வெட் மார்க்கெட்’ தான். ஹூபெய் மாகாணம் வுகானில் உள்ள ஹூனான் கடல் உணவு சந்தை எனப்படும் அந்த வெட் மார்க்கெட்டில் இருந்து வவ்வால் கறி மூலமாக கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கொரோனா பரவத் தொடங்கியதுமே முதல் வேலையாக சீன அரசு அனைத்து இறைச்சி மார்க்கெட்களையும் மூட உத்தரவிட்டது. தற்போது, அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், மீண்டும் மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. இது உலக நாடுகள் வயிற்றில் புளியை கரைக்க தொடங்கி உள்ளது. சீனாவில் மூடப்பட்டிருந்த 94 சதவீத மார்க்கெட்டுகள் மீண்டும் முழு வீச்சில் செயல்படத் தொடங்கி விட்டன. கொரோனாவின் பிறப்பிடமான ஹூனான் கடல் உணவு சந்தைக்கு மட்டும் சீல் வைத்து பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. அதோடு, பாம்பு, முதலை மற்றும் வனவிலங்குகளை விற்கவும் சீன அரசு தடை விதித்துள்ளது.

மற்றபடி, மீன், நண்டு போன்ற கடல் உயிரினங்களும், மற்ற இறைச்சி வகைகளும் வெட் மார்க்கெட்களில் களைகட்டத் தொடங்கி உள்ளன. இதைப் பார்த்து உலக நாடுகள் வெறிகொண்டுள்ளன. ‘‘சீன சந்தைகளில் சுகாதாரமற்ற வகையில் இறைச்சி உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. அதிலிருந்து தான் புதுப்புது வைரஸ்கள் உருவாகின்றன. சீனா செய்த தவறால் இன்று உலகமே பெரும் விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பே முடியாத நிலையில், மீண்டும் சீனா மார்க்கெட்களை திறந்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவற்றை உடனடியாக மூட வேண்டும்,’ என பல நாடுகள் கூக்குரல் எழுப்பி உள்ளன. இது தொடர்பாக அமெரிக்க எம்பிக்கள் குழு, அந்நாட்டுக்கான சீன தூதரிடம் கடிதம் கொடுத்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

சீன வெட் மார்க்கெட்களை திறக்க அனுமதித்த உலக சுகாதார அமைப்பின் முடிவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘‘வனவிலங்குகளின் இறைச்சியை உண்பது கண்டிக்கத்தக்கது. இதிலிருந்து மனிதர்கள் விலகி இருக்க வேண்டிய நேரம் இது. இல்லாவிட்டால் சார்ஸ் 3.0 வைரசுக்கு பலியாக வேண்டியிருக்கும்’’ என ஹாங்காங் மைக்ரோபயாலஜிஸ்ட் பேராசிரியர் யன் எச்சரித்துள்ளார். ஆனால், இதைப்பற்றி எல்லாம் சீன அரசு கவலைப்படவில்லை. சாமானியர்கள் மற்றும் ஏழைகளின் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் வெட் மார்க்கெட்களை மூட அரசு தயாராக இல்லை. கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து கண்துடைப்புக்காக சில கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.

அப்படின்னா என்ன?
வெட் மார்க்கெட் என்பது பொதுவாக வனவிலங்குகளை விற்கும் மார்க்கெட் என்றே பலர் கருதுகின்றனர். ஆனால், உண்மையில் அப்படியில்லை. வெட் மார்க்கெட் என்பவை ப்ரஷ் இறைச்சி, காய்கறிகள், மீன்களை விற்கும் சந்தையாகும். இங்கு பல விலங்கு வகைகளும் உயிருடன் விற்கப்படுவதுண்டு. ஹூனான் கடல் உணவு சந்தை எனப்படும் வெட் மார்க்கெட்டில் தான் பாம்பு, மயில், வவ்வால் மட்டுமின்றி கரடி கூட உயிருடன் கிடைக்கும். இதோடு, பல்லி, தேள், பூரான்களும் உயிருடன் விற்கப்படும். இறைச்சி, காய்கறிகளை தண்ணீரால் சுத்தம் செய்வதால் எப்போதும் மார்க்கெட் முழுவதும் ஈரப்பதமாக இருக்கும். இதனால் அதை வெட் (ஈரப்பதம்) மார்க்கெட் என்கிறார்கள்.

Tags : China ,reopening , Corona, China, Wet Market, World Countries
× RELATED சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து...