×

சிந்தாதிரிப்பேட்டையில் 2 நாள் கழித்து கண்டுபிடிப்பு: உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட 95 வயது தியாகிக்கு கொரோனா,..185 வீடுகளுக்கு சீல் பொதுமக்கள் அச்சம்

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட 95 வயது தியாகிக்கு கொரோனா இருப்பது, அடக்கம் செய்யப்பட்டு 2 நாட்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அப்பகுதியில் 185 வீடுகள் உள்ள தெரு அதிரடியாக மூடப்பட்டுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை, வேதகிரி மேஸ்திரி தெருவை சேர்ந்த 95 வயது தியாகிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, கடந்த 13ம் தேதி எழும்பூர் பகுதியில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவருக்கு பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி எடுத்துவிட்டு சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு செல்லும்படி கூறியுள்ளனர்.

அதன்படி அங்கு சென்றபோது அட்மிஷன் போடுவதற்கு தாமதமானதால் அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டனர். பின்னர் மறுபடியும் கடந்த 14ம் தேதி காலை மீண்டும் முதியவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அதே ஆம்புலன்ஸ் மூலம் மறுபடியும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர்கள் மறுபடியும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி கூறியுள்ளனர். இரண்டாவது முறையாக அங்கு சென்றபோது அட்மிஷன் போட காலதாமதமானதால் அவர்கள் அங்கிருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது மருத்துவமனை வாசலிலேயே பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.  

பின்னர், சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் அவருக்கு இதயத்தில் பிரச்னை இருந்துள்ளதாக கூறி சான்றிதழ் கொடுத்துள்ளார். இதையடுத்து அவருடைய மகன்கள் இருவரும் ராயப்பேட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட மீர்சாகிப்பேட்டை பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டதையடுத்து இரவு 7 மணியளவில் சுடுகாட்டிற்கு எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.இந்நிலையில்,  இறந்த தியாகியின் 50 வயது மகன் கடந்த மார்ச் 24ம் தேதி டெல்லியில் நடந்த மாநாட்டுக்கு சென்று வந்து பின்பு அரசு விடுத்த கோரிக்கையை ெதாடர்ந்து, அவர் தானாகவே கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 9ம் தேதிவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில் நெகட்டிவ் என வந்ததால் அவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

 இதற்கிடையில், கடந்த 14ம் தேதி இறந்த நபரின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. கடந்த 16ம் தேதி மாலையில் இறந்த 95 வயது முதியவரின் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வேதகிரி மேஸ்திரி தெருவிற்கு சென்று அப்பகுதி முழுவதும் சீல் வைத்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, தியாகியின் மகன் மற்றும் பேரன்கள் 2 பேரையும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தியாகியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவர் இறந்த பிறகு உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் மற்றும் மயானத்துக்கு உடன் சென்ற உறவினர்கள் என அனைவரையும் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தியாகியை ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது 2 தடவையும் அட்மிஷன் போடவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்திருந்தால் முடிவுகள் தெரிந்திருக்கும். அவர் அடக்கம் செய்யப்பட்டு 2 நாட்கள் கழித்து பரிசோதனை முடிவுகள் வந்ததால் அவரை சுடுகாட்டுக்கு அடக்கம் செய்ய சென்ற உறவினர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் என அனைவருக்கும் ெகாரோனா தொற்று பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இதேபோன்று ஸ்டான்லி மருத்துவமனையில் இறந்த முதியவர் ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் கொரோனா தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்குமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags : discovery ,martyrdom corona ,houses ,The Houses ,Corona ,Martyr , Chintadripettai, Corona
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்