×

ஆன்லைன் மூலம் பொருட்கள் டெலிவரி பாதுகாப்பு முறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? சமூக இடைவெளி இல்லை என குற்றச்சாட்டு

* பொருட்களை டெலிவரி ெசய்பவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்வதும் கடினமான விஷயமாக உள்ளது.
* ரொக்கப்பணம் தருவதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் பொருட்களுக்கு பணம் தருவதை கடைபிடிக்க வேண்டும்.
* டெல்லியில் ஆன்லைன் பொருட்கள் டெலிவரி ெசய்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததும், அவர் டெல்லியில் சுமார் 70 வீடுகளுக்கு பொருட்களை
டெலிவரி செய்ததும் தெரியவந்துள்ளது.
* காய்கறிகளை டெலிவரி எடுக்கும்போது அவற்றை வெந்நீரில் கழுவிய பிறகே பயன்படுத்துவதாக பிரபல ஓட்டல் மேலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஊரடங்கு நேரத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பொருட்களை தயாரிக்கும்போதும், டெலிவரி செய்யும்போதும் சுகாதார அமைப்பு வகுத்துள்ள உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், ஊரடங்கில் வீட்டில் இருந்தாலும் ஆபத்து வீடு தேடி வரும் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.  கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களிடம் பரவாமல் தடுக்க  நாடெங்கும் மார்ச் 25 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டும் அவகாசம் வழங்கி உள்ளது. அதிலும் ஒருவர் மட்டுமே வரவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் பல இடங்களில் அமலுக்கு வந்துள்ளன.

  இந்நிலையில், பொதுமக்கள் வெளியே வராமல் இருக்க ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்யலாம் என்றும் அந்த பொருட்களையும், உணவு பொருட்களையும் சுவிக்கி, சுமோட்டோ, டன்சோ போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் டெலிவரி செய்யலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. இதனால், வீடுகளில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலம் உணவு பண்டங்களையும், அத்தியாவசிய பொருட்களையும் ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளது.  ஆனால், இந்த பொருட்களை டெலிவரி செய்பவர்கள் உரிய சுகாதாரத்தையும், சமூக இடைவெளியையும் கடைபிடிக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பொருட்களை டெலிவரி ெசய்பவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்வதும் கடினமான விஷயமாக உள்ளது. இந்த நிலையில்தான் டெல்லியில் ஒரு ஆன்லைன் பொருட்கள் டெலிவரி ெசய்தவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது.  அவர் டெல்லியில் சுமார் 70 வீடுகளுக்கு பொருட்களை டெலிவரி செய்துள்ளது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு அந்த வீடுகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு எச்சரிக்கை மட்டுமே என்று எடுத்துக்கொள்ளாமல் அபாயகரமானது என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  சென்னையில் பல இடங்களில் ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்பவர்கள் விதிகளை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவர்கள் பொருட்களை பெறும்போதும், அதை டெலிவரி செய்யும்போதும் கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆன்லைனின் பொருட்களை வாங்குபவர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்யும்போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதும் கேள்வியாக உள்ளது.  இது தொடர்பாக சென்னையை சேர்ந்த சில முக்கிய ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டபோது, ஆன்லைனில் ஆர்டர் செய்தவுடன் எங்களது ஓட்டலுக்கு உணவு பொருட்களை வாங்க வரும் டெலிவரி பாய்களிடம் கைகளை சுத்தம் செய்ய சானிடரி லோசன் தருகிறோம். இதேபோல் டெலிவரி செய்தபிறகும் கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கிறோம். நாங்கள் ஓட்டலுக்கு வாங்கும் காய்கறிகளை வெந்நீரில் சுத்தம் செய்த பிறகே பயன்படுத்துகிறோம் என்றார்.

 உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் குறைந்தபட்ச தொழிலாளர்களைக் கொண்டே ஆன்லைன் வியாபாரத்தை செய்ய வேண்டும்.  ஆட்டர் செய்தவர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்பவர்களுக்கு தினமும் டெம்பரேச்சர் சோதனை செய்ய வேண்டும். அவர்கள் செல்லும் வாகனங்களுக்கு 4 மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.  ஆனால், இந்த நடைமுறைகளை பெரும்பாலான டெலிவரி பாய்களும், பொருட்களை சப்ளை செய்யும் ஓட்டல்கள், மற்றும் பேக்கரிகள் கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டே அதிகரித்துள்ளது.

 ஓட்டல்களில் பயன்படுத்தும் பாத்திரங்கள் சரிவர சுத்தம் செய்யப்பட வேண்டும். காய்கறிகள் சுத்தமாக கழுவி பயன்படுத்தப்பட வேண்டும். கிச்சன்களில் பணியாற்றுபவர்கள் கைகளில் உறைகளை அணிந்திருக்க வேண்டும். டெலிவரி செய்யப்படும் பொருட்கள் இரண்டு பேக்கிங் என இருக்க வேண்டும்.   இந்த நடைமுறைகளை ஒழுங்காக கடைபிடிக்கிறார்களா என்பதை உறுதி செய்தபிறகே பொருட்களை ஆர்டர் செய்து வாங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளும், தன்னார்வலர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள். 


Tags : Delivery ,accidents , Online, Delivery, Social Gap, Corona
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி