×

2016 ஏப்ரல் 18... அந்த நாள் ஞாபகம்! ஐபிஎல் கோப்பையை வென்றது வாழ்வில் மறக்க முடியாத தருணம்...வார்னர் நெகிழ்ச்சி

மெல்போர்ன்: ஐபிஎல் கோப்பையை 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வென்றது வாழ்வில் என்றும் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் என்று அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார். பெங்களூரில் 2016ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ்  7 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்தது. கேப்டன் வார்னர் 38பந்தில் 69, சக வீரர் பென் கட்டிங் 15 பந்துகளில் 35 ரன் குவித்தனர். தொடர்ந்து விளையாடிய  பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கேல் 38 பந்தில் 76, விராட் கோஹ்லி 35 பந்தில் 54 ரன் என முதல் விக்கெட்டுக்கு 114 ரன் குவித்தனர்.

ஆனால் அடுத்து வந்தவர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன் மட்டுமே எடுத்தது.  அதனால் 8 ரன் வித்தியாசத்தில் வென்ற சன்ரைசர்ஸ் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றி குறித்து நினைவுகூர்ந்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது: ஐபிஎல் தொடர் அனுபவத்தில் என்னால் மறக்க முடியாத விஷயம் என்றால் அது  2016ம் ஆண்டு  கோப்பையை வென்றதுதான். எல்லா வகையிலும் அது மிகவும் சிறப்பான போட்டி. இனி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத மகிழ்ச்சியை தரும் நிகழ்ச்சியாக அது அமைந்து விட்டது. அதிலும் வெற்றியை நெருக்கத்தில் பெற்றதுதான்  இன்னும் சிறப்பான விஷயம்.

அந்த தொடரின் பைனலில் பெங்களூர் அணிக்கு எதிராக களம் கண்டோம். அந்த அணியின் கேப்டன் விராட் கோஹ்லி அந்த தொடரில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தார். மேலும் அந்த அணியில் கிறிஸ் கேல், டி வில்லியர்ஸ் என சிறந்த வீரர்கள் இருந்தனர். எங்கள் திறமையை நம்பி களம் கண்டோம். சேசிங்கில் முதல் விக்கெட்டுக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரன் குவித்த வேகத்தை பார்த்து என் இதயம் வாய்க்கு வந்துவிட்டது. ஆனாலும் புவனேஸ்வர் குமார் அற்புதமாக பந்து வீசி வெற்றியை எங்கள் பக்கத்துக்கு திருப்பினார். ஊரடங்கால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நேரத்தில், இந்த போட்டியின் மலரும் நினைவுகள் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு வார்னர் கூறியுள்ளார்.

Tags : Warner ,IPL Cup , IPL Cup, Warner
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் முதல் டி20 11 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி