×

ஆயிரக்கணக்கானோர் குவிந்தும் பாதுகாப்பு இல்லை,.. அமைச்சர் பங்கேற்ற விழாவில் அரிசி வாங்க மக்கள் முட்டிமோதியதால் பலர் படுகாயம்

* காற்றில் பறந்த சமூக இடைவெளி
* காரைக்குடியில் பரபரப்பு

காரைக்குடி: அமைச்சர் பங்கேற்று காரைக்குடியில் அனைவருக்கும் இலவச அரிசி வழங்கப்படுவதாக வந்த வதந்தியால், சமூக இடைவெளியை மறந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இவ்வளவு களோபரம் நடந்தும் அமைச்சர், கலெக்டர், போலீஸ் உயரதிகாரிகள் எதையும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, சத்யா நகர் பகுதி தூய்மை பணியாளர்கள், ஏழை மக்களுக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் சார்பில், சிவன் கோயில் பகுதி பள்ளியில் நேற்று அரிசி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியை சுற்றி உள்ள அனைத்து மக்களுக்கும் அரிசி வழங்கப்பட உள்ளதாக வதந்தி பரவியதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் திரண்டனர்.

சமூக இடைவெளியை மறந்து மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியதால், போலீசார் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தரப்பட உள்ளதாக கூறி கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் பெரும்பாலானோர் கலையாமல் நின்றனர். சுமார் 3 மணி நேரம் வரை பலரும் கொளுத்தும் வெயிலில் காத்திருந்தனர்.  நிகழ்ச்சியை அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் துவக்கி வைத்து விட்டு சென்றனர். அமைச்சர் சென்ற பின்னர், அப்பகுதியில் திரண்டிருந்த மக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக கூடி, ஒருவரை ஒருவர் தள்ளி முண்டியடித்துக் கொண்டு, பள்ளியின் கதவை திறந்தவுடன் அரிசி வாங்க திமுதிமுவென உள்ளே சென்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். பலரை போலீசார் லத்தியால் அடித்து விரட்டினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

எனினும் போலீசார் ஒரு மணிநேரம் வரை போராடி கூட்டத்தை அடித்துவிரட்டி கட்டுப்படுத்திய பின்னர் அரிசி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரிசி வழங்கிய பிறகு அமைச்சர், கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று சென்றனர். இதன் பிறகு நடந்த களோபரம், பொதுமக்கள் காயமடைந்தும் யாரும் ஆறுதல் கூற வராமல் வேறு பகுதிக்கு சென்றனர். மேலும் இவ்வளவு நபர்கள் சமூக இடைவெளி இல்லாமல் நிற்பது, அதிகளவு மக்கள் கூடியது குறித்து அமைச்சர் கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் தான் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 6 ஆயிரம் பேருக்கு அரிசி வழங்கப்பட உள்ளதாக யாரோ புரளி கிளப்பி விட்டுள்ளனர். இதனால் அதிகளவில் மக்கள் திரண்டனர். தூய்மை பணியாளர்கள் மற்றும் மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என கூறியும், கலைந்து செல்லாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது’’ என்றனர்.


Tags : ceremony ,minister , Karaikudi, free rice, corona
× RELATED இந்து,முஸ்லிம்கள் இணைந்து நடத்திய பொன் ஏர் விடும் விழா