×

மது அடிமைகள் மரணத்தை தடுக்க டாஸ்மாக் கடையை 3 மணி நேரம் திறக்க கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் அதிரடி

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓட்டேரியை சேர்ந்த மாலினி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மார்ச் 25 முதல் மே 3ம் தேதி வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மது பழக்கத்திற்கு ஆளானவர்கள் மற்றும் மது அடிமைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மது கிடைக்காததால் கள்ளச்சாராயம் மட்டுமல்லாமல், கெமிக்கல் பொருட்களையும் குடிக்கும் சூழ்நிலைக்கு மது அடிமைகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இப்படி கள்ளத்தனமாக மது குடித்தவர்களில் 11 பேர் இறந்துள்ளனர். மதுக்கடைகளை மூடியதால் போதைக்கு அடிமையானவர்கள் டாஸ்மாக் கடைகளை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்களும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பு மது அடிமைகள் குறித்து அரசு எந்த மாற்று ஏற்பாட்டையும் செய்யவில்லை. எனவே, மதுவுக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ அறிக்கையை பரிசீலித்து அதன் அடிப்படையில் அவர்களுக்கு உரிய நிவாரணத்தை ஏற்படுத்த அதிகாரிகள் முன்வரவேண்டும். மது கிடைக்காததால் உயிர்ப்பலியை தடுக்க ஊரடங்கு காலத்தில் தினமும் 3 மணி நேரம் டாஸ்மாக் கடைகளை திறக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல ஆர்.எம்.கோகுலகிருஷ்ணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு உரிய ஆய்வுக்குப் பிறகே மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags : opening ,death ,task shop , Alcohol Addicts, Task Shop, Icord
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு