×

முதல் கொரோனா நோயாளியை கண்டறிந்தது பிப்ரவரியா, மார்ச்சா? பீலா விடுகிறாரா பீலா ராஜேஷ்: நிர்வாக குளறுபடியை மறைக்க முன்னுக்குபின் முரணாக பேசும் அவலம்

சென்னை: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மீது குற்றச்சாட்டு வந்து விடக்கூடாது என்பதற்காக முன்னுக்குப்பின் முரணாக அவர் பேசி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாட்டிலேயே கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. ெகாரோனா பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆய்வகம் அமைப்பதில் தாமதம், கொரோனா அறிகுறியுடன் வந்தவர்களை பரிசோதனை செய்வதில் சிக்கல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் குளறுபடி, வெளிமாநிலம், வெளிநாட்டினரின் பட்டியலை பெறுவதில் குழப்பம், தமிழகத்துக்கு வந்தவர்களை கண்டுபிடிப்பதில்த திணறல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதிலும், குறிப்பாக, கடந்த நவம்பரிலேயே சீனாவில் வுகான் மாகாணத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருந்தது.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் டிசம்பரிலேயே உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அதன்பிறகும் தமிழகத்தில் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டியது. ஆனால், இதை மறைக்க சுகாதாரத்துறை முன்னுக்குபின் முரணாக தகவல் அளித்து வருகிறது. குறிப்பாக, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டியளிக்கும் போது, தமிழகத்தில் முதல் கொரோனா நோயாளி பாதிக்கப்பட்டது பிப்ரவரியில் தான் கண்டுபிடிக்கப்பட்டார். இது ெதாடர்பாக நமக்கு இப்போது தான் தெரிய வந்தது. அதன்பிறகு ஆய்வு செய்து நிபுணர் குழு அமைத்து என்ன மாதிரியான சிகிச்சை அளிப்பது, என்ன மாதிரியான மருத்துவ உபகரணங்கள் வாங்குவது தொடர்பாக அறிவுரை வழங்கினார்கள் என்று கூறினார்.

இதனால், பிப்ரவரியிலேயே நோயாளி கண்டறியப்பட்ட நிலையில் மார்ச் மாதம் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், ஆய்வகம் அமைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்றும் அவர்கள் குற்றச்சாட்டை எழுப்பினர். இது, சுகாதாரத்துறைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, சமீபத்தில் பீலா ராஜேஷ் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது, தமிழகத்தில் மார்ச் 9ம் தேதிக்கு பிறகு தான் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார்.

ஆனால், மற்ற மாநிலங்களில் அதற்கு முன்னரே நோயாளிகள் கண்டறியப்பட்டதால், அவர்கள் பரிசோதனை ஆய்வகம் அமைத்து ெகாரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதனால், பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார். தற்போது கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாத நிலையில், அவர் மீதான எந்த விதமான குற்றச்சாட்டுகளும் வந்து விடக்கூடாது என்பதற்காக முன்னுக்குப்பின் முரணாக அவர் பேசி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Coronal Patient ,Marcha ,Dhirunna Beela Rajesh ,Beela Rajinesh , Corona, February, March, Beela Rajesh
× RELATED ஓமந்தூரார் பன்நோக்கு அரசு...