×

வாட்டி வதைக்கும் பசியின் கொடுமை ஒரு பிடி சோறுக்கு கையேந்தும் பிஞ்சுகள்: வாகன ஓட்டிகளை மறித்து பணம் கேட்கும் பரிதாபம்

* உணவுக்காக சாலை சாலையாக திரியும் முதியோர்கள்

சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக வாட்டி வதைக்கும் பசியின் கொடுமையால் ஒரு பிடி சோறுக்கு பிஞ்சு கைகளும், முதியோர்களும் சாலை சாலையாக சுற்றித்திரிந்து உணவுக்கு கையேந்தும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோரதாண்டவம் ஆடி வரும் கொடிய நோயான கொரோனாவுக்கு 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.5 லட்சம் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 400க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு முடிந்தும் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் 24ம் தேதி 21 நாட்கள் தேசிய ஊரடங்கு பிறப்பித்து பிரதமர் மோடி அறிவித்தார். அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என தெரிவித்தார். அதன்படி, அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் தவிர அனைத்தும் தொழில்களும் முடங்கியது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 14ம் தேதியுடன் முடிந்த ஊரடங்கை வரும் மே 3ம் தேதி வரை நீடித்து பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் வருமானத்திற்கே வழியில்லாததால் தினக்கூலி தொழிலாளர்கள் என்ன செய்வது என தெரியாமல் உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர். சாலையோர வாசிகள், ஆதரவற்றோர் மற்றும் பிஞ்சு குழந்தைகள் ஒரு பிடி சோறுக்கு கையேந்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது, கொரோனா வைரஸ் பெயரை கேட்டாலே அனைவரின் கண்களில் பயம் மட்டும் தெரியவில்லை. வாட்டி வதைக்கும் பசியின் கொடுமையும் தெரிகிறது. வழக்கமான நாட்களில் ஏராளமான மக்கள் நடமாடுவதால் சாலையோர வாசிகள், ஆதரவற்றோர் மற்றும் பிஞ்சு குழந்தைகள் தங்களின் பசி கவலைகளை அறியாமல் இருந்தனர். வறுமையின் கொடுமை இருந்தாலும், மனிதநேயமிக்க நபர்களின் உதவியால் பசியின் கவலைகளை மறந்து இருந்தனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மீறி உணவு தந்து உதவ வருபவர்களிடம் போலீஸ் காட்டும் கெடுபிடிகளால் அவர்களும் வீட்டிற்குளேயே முடங்குகின்றனர்.

 ஒரு பக்கம் வெளிமாநில தொழிலாளர்கள், ஆதரவற்றோர், சாலையோர வாசிகள் ஆகியோருக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்தாலும், தலைநகர் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் பசியின் கோர பிடியில் தவிக்கும் மக்களின் கண்கலங்கும் காட்சிகள் அரங்கேறித்தான் வருகிறது.
உணவை பார்த்தால் நமக்கு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் முண்டியடித்து ஓடும் நிலைதான் உள்ளது. பசியை போக்க சுற்றுபவர்கள் முக கவசம் அணிவது இல்லை. வெளி வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு போடும் அரசு, வெளியிலேயே வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்குவதில்லை. அவர்களை பாதுகாப்பதிலும் அலட்சியமாக காட்டுகிறது.

அரசு என்பது மக்களுக்கு சேவை செய்யத் தான். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் தவிக்கும்போது அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும். அரசு சார்பில் மலிவு விலையில் அம்மா உணவகத்தில் உணவுகள் வழங்கப்படுகிறது. வறுமையின் பிடியில் சிக்கி உள்ளவர்கள் அம்மா உணவகத்தில் கூட காசு கொடுத்து சாப்பாடு வாங்க வழியில்லை.
இவர்களை கண்டறிந்து அம்மா உணவகத்திலோ அல்லது தனியாகவோ சமைத்து சாப்பாடு வழங்கலாம். இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வாகன ஓட்டிகளை வழிமறித்து உணவுக்கு பணம் கேட்கும் பரிதாப நிலை தமிழ்நாட்டில் ஏற்படாது.

பிஞ்சு குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் சாலை சாலையாக சுற்றித்திரிந்து ஒரு பிடி சோறுக்கு கையேந்தும்போது அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. அந்த வலிகளை சொல்ல வார்த்தையே இல்லை. என்னதான் தன்னார்வலர்கள் தேடி தேடி கொடுத்தாலும், அரசு நிர்வாகம் போன்று பம்பரம்போல் சுழன்று கொடுக்க முடியாது. தன்னார்வலர்கள் கரங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களின் பசியை தான் போக்க முடியும். ஆனால், அரசு நினைத்தால் பசி கொடுமை இல்லா தமிழகத்த்தை உருவாக்கலாம்.

Tags : motorists , Curfew, Corona
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...