×

ரெட் அலர்ட் விதிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் இயங்கும் தொழிற்சாலைகள் எவை?... 20ம் தேதிதான் அறிவிப்பு வெளியாகும் என்பதால் குழப்பம்

சென்னை: தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது குறித்து வரும் 20ம் தேதி  தமிழக அரசு அறிவிப்பை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மே 3ம் தேதி வரையில் 2ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் கொண்டுவரலாம் என கருதப்பட்டது. அதன்படி, சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமானப்பணிகள் மற்றும் வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளும் தொடங்க அனுமதி.  

நெடுஞ்சாலைகளில் உள்ள மெக்கானிக் ஷாப்புகள், தாபாக்கள், 33 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலங்கள் இயங்கலாம். தச்சுவேலை, பிளம்பர், எலெக்ட்ரீஷியன், மோட்டார் மெக்கானிக் போன்ற தொழிலில் ஈடுபடுவோருக்கு அனுமதி. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். கொரியர் சேவைகள் தொடரலாம் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. இதேபோல், ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம். ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
   
இந்தநிலையில், தமிழகத்தில் வரும் 20ம் தேதிக்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்க உள்ளது. இது தொடர்பாக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு எந்தெந்த பகுதிகளில் என்ன தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது குறித்து முடிவு செய்து அறிக்கையாக முதல்வருக்கு சமர்பிக்க உள்ளது. பின்னர், இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு திங்கள்கிழமை அறிவிக்க உள்ளது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சேலத்தில் கூறியதாவது: இன்றைக்கு மத்திய அரசு வருகிற 20ம் தேதி (நாளை மறுதினம்) முதல் சில தொழில்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு விதிவிலக்கு அளித்துள்ளது.

அதற்காக தமிழக நிதித் துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழு, என்னென்ன தொழில் துவங்கலாம் என்று மத்திய அரசு வரைமுறைப்படுத்துகின்றது, அதை அந்த குழு ஆராய்ந்து எந்தெந்த தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கலாம் என்பதையெல்லாம் ஆய்வு செய்து திங்கட்கிழமை (நாளை மறுதினம்) அறிவிக்கும். அதே நேரம், 20ம் தேதிக்கு பிறகு எல்லா தொழிற்சாலைகளும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்படவில்லை. என்னென்ன தொழிற்சாலைகள் இயக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, இதற்கு தான் உயர்மட்ட குழுவை நாங்கள் அமைத்திருக்கிறோம்.

அந்த உயர்மட்ட குழு ஆய்வு செய்து எந்தெந்த தொழிற்சாலைகளை துவக்குவதற்கு அனுமதி கொடுக்கலாம் என்று நாளை மறுதினம் அறிக்கை சமர்பிக்க உள்ளது, அதன் அடிப்படையில் அரசு அறிவிக்கும். கிராமப்புறங்களில் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு எந்தவித தடையும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதேநேரம், தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட நகர்ப்புற, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகள் செயல்பட அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். அதேநேரம் அரசு அலுவலகங்கள், சில தனியார் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு திங்கட்கிழமை முதல் செயல்படலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதே நேரம் பஸ், ரயில் போக்குவரத்து இருக்காது என்றும் அறிவித்துள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் எப்படி பணிக்கு வருவார்கள் என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுபற்றி தமிழக அரசும் எந்த அறிவிப்பையும் வெளியிடவி–்லை. அதேநேரம் ஊரடங்கு தளர்வு என்று அறிவித்துள்ள 20ம் தேதி தான் தமிழக அரசு அறிவிக்கும் என்று அறிவித்துள்ளதால், எப்படி பணிக்கு வருவது என்பதில் ஊழியர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதற்காக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பஸ் நிலையங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது முதல்வர் எடப்பாடி சேலத்தில் அவரது சொந்த ஊரில் உள்ளார். நாளை இரவுதான் அவர் சென்னை திரும்புகிறார்கள். இதையடுத்து நாளை மறுதினம் (திங்கள்) நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், எந்தெந்த பணிகளை 20ம் தேதி முதல் தொடங்கலாம் என்பது குறித்த அறிக்கையை முதல்வரிடம் அளிப்பார். இதையடுத்து நாளை மறுதினம் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

Tags : factories ,Tamil Nadu , Red alert, running factories, mess
× RELATED மாவட்ட தீ தடுப்பு, தொழிற்சாலைகள் : பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை