×

வனப்பகுதியில் மலைமாடுகள் மேய்ச்சலுக்கு தடை: தீவனமின்றி உயிரிழக்கும் அபாயம்

கூடலூர்: வனப்பகுதியில் மலைமாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளதால், தீவனமின்றி மாடுகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டம் கூடலூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆயிரக்கணக்கான மலை மாடுகள் இருந்தது. தீவனப்பற்றாக்குறையால் தற்போது 700 மாடுகளாக குறைந்துள்ளது. இந்த மலைமாடுகளை ஆங்காங்கே தொழுவம் அமைத்து பாதுகாத்து வருகின்றனர். பகல் நேரத்தில் இவை அனைத்தும் மங்கலதேவி கண்ணகி கோயில் மலையடிவாரம், சுருளியாறு வனப்பகுதி, பெருமாள்கோயில், லோயர்கேம்ப் வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வார்கள். வழக்கமாக இவ்வாறு சென்று வந்த மாடுகளை கடந்த ஒரு வாரமாக வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதனால், தீவனம் கிடைக்காமல் மாடுகள் அனைத்தும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் ஒரு மாடு தீவனம் இன்றி இறந்தது. தொடர்ந்து பல மாடுகள் இறக்கும் அபாயநிலையை எட்டியுள்ளது. வனத்துறையினர் கம்பம் மேற்கு வனச்சரகத்தில் மலைமாடுகளை மேய்த்துக் கொள்ள கூறியுள்ளனர். ஆனால், மேற்கு வனச்சரக பகுதியில் தற்போது மழையின்றி புல் உள்ளிட்ட தீவனங்கள் கடுமையான வெப்பத்தால் கருகிய நிலையில் உள்ளன. அங்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றால் மாடுகளுக்கு எந்தப்பலனும் இல்லை என்றும் மலைமாடு வளர்ப்போர் சங்கத்தினர் தெரிவித்தள்ளனர்.

இதுகுறித்து கர்னல் ஜான் பென்னிகுவிக் பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், ஆலோசகர் ராமர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பாலன், பிரகாஷ் உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அனுமதிக்காததால், தீவனமின்றி மாடுகள் இறக்கும் அபாய நிலையில் உள்ளது. வழக்கமாக மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் பகுதியில் வனத்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். உடனடியாக இதற்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் ‛கொரோனா’ தொற்று பிரச்னை முடிவுக்கு வந்தவுடன் மீண்டும் போராட்டத்தில் இறங்க உள்ளோம் என்றனர்.

Tags : deaths ,fatalities , Barrier,mountain, wild,deaths
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...