×

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு நீண்டகால பாதுகாப்பு அவசியம்: மருத்துவ ஆய்வாளர்கள் தகவல்

நெல்லை: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு நீண்டகால பாதுகாப்பு அவசியமென மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 21.97 லட்சம் பேரை தாக்கியுள்ளது. இதில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 5 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தாக்குதல், அதிலிருந்து மீள்வது மற்றும் தொடர் பராமரிப்பு குறித்த தகவல்களை உலக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பரில் இருந்து இந்த வைரஸ் தொற்று உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. வைரஸ் மனிதர்களுக்கு மூக்கு அல்லது வாய் வழியாக நுரையீரலில் உள்ள வெற்றிடம் காற்றுப்பை போன்ற பகுதிகளில் அடைக்கலம் ஆகின்றன. அங்கு இயல்பாக உள்ள சில சிறிய பள்ளம் போன்ற பகுதிகளிலும் அவை நங்கூரம் இடுகின்றன. தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களை வைரஸ் முதலில் தாக்கி அழிக்கிறது. இதன் தாக்கம் அதிகரிக்கும்போது சிலருக்கு நுரையீரலில் இருந்து சுவாச பிரச்னை தொடங்குகிறது. இது அவரவர் உடல்நிலையை பொறுத்து அதிகரிக்கிறது. இதனால் சிலருக்கு செயற்கை சுவாச சிகிச்சை முறை உடனடியாக தேவைப்படுகிறது.

அப்போது அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகளை மீறி வைரஸ் தாக்குதல் நீடிக்கும் பட்சத்தில் உடலிலுள்ள பிற முக்கிய உறுப்புகள் பலவீனம் அடைகின்றன. இந்த நிலை ஏற்படுபவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆயினும் தற்போதைய புள்ளி விவரப்படி 80 முதல் 85 சதவிகித கொரோனா வைரஸ் தாக்குதல் நோயாளிகள் சிறிய அளவிலான பாதிப்புகளுடன் குணமடைகின்றனர். 15 முதல் 20 சதவிகிதம் பேர் அதிக பாதிப்பு பட்டியலில் உள்ளனர். தொற்று பாதித்த ஒரு நோயாளி முழுமையாக குணமடைய குறைந்தது 6 வாரம் தேவைப்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதிக பாதிப்பு ஏற்பட்ட ஒரு சிலருக்கு முழு குணமடைய சில மாதங்கள் கூட தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு குறைந்த அளவிலான பாதிப்புகளே ஏற்படுகின்றன.

இவர்கள் இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளுடன் மீள்கின்றனர். மேலும் சிலர் வீடுகளில் இரு வாரங்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டு அந்த நிலையிலேயே குணமடைகின்றனர். வயதானவர்களுக்கும், இருதயக் கோளாறு, ஆஸ்துமா, நீரிழிவு போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக இருப்பதால் கிருமியின் பாதிப்பு வேகமாக உடலில் பரவுகிறது. கடந்த வாரம் இந்தியாவில் ஏற்பட்ட தொற்று உயிரிழப்பில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர். செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் சிலருக்கு உடல் எடை குறைவு, உடல் பலவீனம், அவ்வப்போது சுவாச கோளாறு ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் சில நாட்கள் இருக்கலாம்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதற்கு அளிக்கப்படும் தனிமை ஓய்வு, சில நாடுகளில் வேறுபட்டிருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள், மேலும் 14 நாட்கள் தொடர்ந்து வீட்டில் தனிமையை கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த வை ரஸ் தாக்குதல் காரணமாக இருதயம், சிறுநீரகம் போன்றவையும் பாதிப்பதாக தெரியவந்துள்ளது. சீன ஆராய்ச்சி டாக்டர்கள் கூறுகையில், சிலருக்கு இந்த வைரஸ் தாக்கத்தால் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியும் ஏற்பட்டதாகவும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு நீண்டகால மருத்துவ பாதுகாப்பு அவசியம் என்றும்  தெரிவித்துள்ளனர்.



Tags : survivors ,researchers , coronavirus, Long-term care,Information,medical researchers
× RELATED லண்டனில் ஆழ்கடலில்...