×

அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ மையம் அருகே காட்டுத்தீ: தொடர்ந்து எரிவதால் மரங்கள் நாசம்

தேவாரம்: நியூட்ரினோ ஆய்வு மையம் அருகே உள்ள அடர்ந்த காடுகளில் காட்டுத்தீ தொடர்ந்து எரிகிறது. இதில் அரிய வகை மரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்டது டி.புதுக்கோட்டை. இங்குள்ள அம்பரப்பர் மலையில்தான் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. இங்கு அடர்ந்த காடுகள் உள்ளன. அரியவகை மரங்கள், வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. இப்போது வெப்பம் கொளுத்தி வருகிறது. இதனால் காடுகளில் திடீரென தீப்பற்றி எரிகிறது.இதனை அணைத்திட தேவையான நடவடிக்கைகளை எடுத்தும் சமூகவிரோதிகள் தங்களது சுய நோக்கத்திற்காக தொடர்ந்து தீ வைக்கும் செயல் அரங்கேறி வருகிறது. நேற்று முன்தினம் இரவு தேவாரம் டி.புதுக்கோட்டை அடர்ந்த காட்டில் பிடித்த தீ இரவு முழுவதும் எரிந்தது.

இதனை பார்த்தவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் வனத்துறை தீயை அணைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘தொடர்ந்து வனப்பகுதிகளில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பற்றி எரிகிறது. இதனை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும். வனத்துறை கட்டாயமாக இரவு ரோந்து சென்று தீ வைக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்..

மின்னல் தாக்கி காட்டுத்தீ
திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பெரும் மழை பெய்தது. அப்போது பேய்மலை மொட்டை என்ற பகுதியில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் வனப்பகுதியில் தீ பரவியது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பிடித்த காட்டுத்தீ திருவில்லிபுத்தூர் நகர் மக்கள் பார்க்கும் வகையில் பற்றிப் படர்ந்தது. காட்டுத்தீயால் அங்கிருந்த வனவிலங்குகள் தப்பி ஓடின. அப்பகுதி மலைவாழ் மக்கள், வனத்துறையினருடன் சேர்ந்து தீயை நேற்று அணைத்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், ``தீப்பிடித்த வனப்பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் ரிசீவர் அமைக்கப்பட்டுள்ளது. தீவிபத்தில் அதற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த ரிசீவரால் உடனுக்குடன் வனத்துறையினருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதால் விரைந்து தீயை அணைக்க முடிந்தது’’ என்றனர்.

Tags : Neutrino Center ,burning ,Umbrapper Mountain ,Ambarappar Mountain , Wildfire ,Neutrino Center , Ambarappar Mountain:,trees
× RELATED ராஜபுத்திரர்கள் பற்றி அவதூறு பேச்சு...