×

ஓசூர் அருகே கிராமத்தையொட்டி 13 யானைகள் முகாம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஓசூர்: ஓசூர் அருகே, சூளகிரி வனச்சரகத்திற்குட்பட்ட நீலவங்கா கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் 13 யானைகள் முகாமிட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகம், சானமாவு பகுதிகளில் சுற்றித்திரிந்த 30க்கும் மேற்பட்ட யானைகள், கடந்த 6 மாதங்களுக்கு முன் தமிழக எல்லையை கடந்து கர்நாடக மாநிலத்திற்கு சென்றன. அந்த யானைகள் கோலார், முளுபாகலு உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகளில் சுற்றி வந்தன. தற்போது ஆந்திரா, கர்நாடக மாநில வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதனால், அங்கு சுற்றி திரிந்த யானைக்கூட்டம் 2, 3 குழுக்களாக பிரிந்து உணவு, தண்ணீர் தேடி தமிழக வனப்பகுதியை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டன. இந்நிலையில், நேற்று காலை ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைப்பகுதியிலிருந்து வெளியேறிய 13 யானைகள், தற்போது சூளகிரி அருகே உள்ள நீலவங்கா கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. தற்போது ஓசூர் பகுதியில் கோடை மழை பெய்துள்ளதால், கோடை உழவு பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்த சமயத்தில் யானைகள் வந்துள்ளதால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இந்த யானைக்கூட்டத்தை, 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், பொதுமக்களும், விவசாயிகளும் வனப்பகுதிக்குள் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : elephants camp ,village ,public ,Hosur ,Hosur 13 Village , Village ,Hosur, 13 Elephants ,Camp,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...